கட்டப்பை பறக்காமல் இருக்க கல்லு... பொங்கல் பரிசைப் பெற களத்தில் இறங்கிய பொதுமக்கள்!
சத்தியமங்கலம் பகுதிகளில் பொங்கல் பரிசு தொகுப்பை பெறுவதற்காக காலை முதலே கற்கள், கூடை, துணிப்பை வைத்து மக்கள் இடம் பிடித்தனர்.
தைப்பொங்கலை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கரும்பு, சர்க்கரை, பச்சரிசி உள்ளிட்ட 6 பொருள்களுடன் 2,500 ரூபாயும் வழங்கப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். அதன்படி , 4 ஆம் தேதி காலை முதல் தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பொங்கல் பரிசு தொகுப்பானது டோக்கன் முறையில் ஒரு நாளில் 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் பரிசு தொகுப்பினை அந்தந்த மாவட்டங்களில் உள்ள தமிழக அமைச்சர்கள் தொடங்கி வைத்து வழங்கி வருகின்றனர். பொதுமக்கள் இடையூறு இன்றி சமூக இடைவெளியுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெறுவதற்கு நீண்ட வரிசையில் வட்டம் போட்டு, வரிசையாக வருவதற்கு தடுப்பு கம்பிகளும் அமைக்கப்பட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பொங்கல் பரிசுத் தொகுப்பினை வாங்குவதற்காக தற்போது சில இடங்களில் பெய்து வரும் சாரல் மழையையும் பொருட்படுத்தாமல் காலை முதலே பொதுமக்கள் ரேசன் கடைகளுக்கு முன் அமர்ந்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள வடக்குப்பேட்டை ரேசன்கடைகளில் இடம் பிடிப்பதற்காக வரிசையாக கற்கள், கூடை, துணிப்பை வைத்து மக்கள் இடம் பிடித்துள்ளனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பொங்கல் பரிசைத் தொகுப்பைப் பெற இதுபோன்ற சூழ்நிலையே நிலவி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Comments