ரூ. 40 லட்சத்துக்கு ஏலம்: சாதாரணமாக பார்த்தால் பரிசல் ... பயணித்தால் விமான கட்டணம்!
தருமபுரி அருகேயுள்ள ஒட்டனூர் காவிரி ஆறு பரிசல் துறை ரூ. 40 இலட்சத்துக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. இதனால், பரிசல் பயணத்துக்கான கட்டணம் உயர்த்தப்படுவதால் 200 கிராமங்களை சேர்ந்த ஏழை மக்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டத்திலுள்ள பென்னாகரம், ஏரியூர், நெருப்பூர், நாகமரை, பெரும்பாலை, ஏமனூர், பூச்சூர், ராமகொண்டஅள்ளி உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்கள் விளைபொருட்களை சந்தைக்கு எடுத்து செல்லவும் குழந்தைகளின் படிப்புக்காகவும் முழுக்க முழுக்க சேலம் மாவட்டத்தையே நம்பி உள்ளனர். தரைமார்க்கமாக சேலம் மாவட்டத்துக்கு செல்ல பென்னாகரம், பெரும்பாலை, மேச்சேரி வழியாக சுமார் 70 கிலோ மீட்டர் செல்ல வேண்டும்.
அதே வேளையில், தருமபுரி மாவட்டம் நாகரை அடுத்துள்ள ஒட்டனூர் காவிரி ஆற்றில் பரிசல் மூலமாக சென்றால் 1 கிலோ மீட்டர் தொலைவில் சேலம் மாவட்டத்திலுள்ள கோட்டையூர் பரிசல்துறையை அடைந்து விடலாம். அங்கிருந்து கொளத்தூர், மேட்டூர், மாதேஷ்வரன் மலை, ஈரோடு, கோவை, திருப்பூர் ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகள் மூலம் எளிதாக சென்று விட முடியும். இதன் காரணமாக, தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள், கூலி தொழிலாளர்கள், பள்ளி,கல்லூரி மாணவ,மாணவிகள் ஒட்டனூர் பரிசல்துறையை பயன்படுத்தி காவிரி ஆற்றை கடந்து சேலம் மாவட்டத்துக்கு சென்று வந்தனர். இதனால், ஒட்டனூர் பரிசல்துறை எப்போதும் கூட்டம் அலை மோதும். விடுமுறை நாள்களில் 2,000க்கும் மேற்பட்ட மக்கள் இந்த படகுத்துறையை பயன்படுத்தி வந்தனர்.
ஆண்டுதோறும் ஒட்டனூர் பரிசல்துறை தனியாருக்கு ஏலம் விடுவது வழக்கம். ஏரியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் இந்த படகுத்துறை ஏலம் விடப்பட்டு வந்தது. இத்தனை ஆண்டுகளாக தனியாருக்கு அதிகபட்சமாக ரூ. 3 இலட்சம் வரை ஏலம் விடப்பட்டது. ஒப்பந்ததாரர் பரிசலில் செல்ல நபர் ஒன்றுக்கு ரூ. 15 இருசக்கர வாகனங்களுக்கு ரூ. 35 என கட்டணமாக வசூலித்தனர். நாள் ஒன்றுக்கு 1000- க்கும் மேற்பட்டவர்கள் பரிசலை பயன்படுத்தி வந்தனர். இதனால் ,தனியார் ஒப்பந்ததாரர்கள் ஆண்டுக்கு ரூ. 90 லட்சம் வரை வரை லாபம் பார்த்து வந்தனர்.
ஒட்டனூர் பரிசல் துறையில் அதிகம் லாபம் கிடைக்கும் என்பதால் இந்த ஆண்டு இந்த பரிசல் துறையை ஏலம் எடுக்க கடும் போட்டி நிலவியது. இறுதியாக ரூ. 40, 35, 000 ஒட்டனூர் பரிசல் துறை ஏலம் விடப்பட்டது. அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டதால், குத்தகைத்தாரர் அந்த பணத்தை வசூலிக்க மக்கள் தலையில்தான் கை வைப்பார்கள். அந்த வகையில், பரிசலில் பயணம் செய்யும் கட்டணத்தை பல மடங்கு உயர்த்த குத்தகைதாரர்கள் திட்டமிட்டுள்ளதால் 200 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கடும் வருத்தம் அடைந்துள்ளனர்.
இதனால், ஒட்டனூர் பரிசல்துறை, சேலம் மாவட்டம் கோட்டையூர் இடையே உள்ள காவிரி ஆற்றில் சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவுக்கு பாலம் அமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments