குழந்தை பெற்றெடுத்த மிசோரம் சிறுமி... விற்பனை செய்த சென்னை கல்லூரி மாணவிகள்!

0 61083

சென்னையில் 16 வயதான மிசோரம் சிறுமிக்கு பிறந்த குழந்தையை கல்லூரி மாணவிகள்  விற்பனை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் உள்ள வைத்தியநாதன் தெரு போலீஸ் பூத் அருகே பிறந்து 10 நாட்களே ஆன பெண் குழந்தையுடன் பெண் ஒருவர் பதற்றத்துடன் நின்று கொண்டிருந்தார். போலீஸ் பூத்தில் இருந்த பெண் காவலர் சித்ரா, நீண்ட நேரம் கைக் குழந்தையுடன் நின்று கொண்டிருந்த பெண்ணிடம் என்ன ஏதுவென்று விசாரித்துள்ளார். 

பதற்றமாக இருந்த அந்த பெண் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். இதனால், சந்தேகமடைந்த சித்ரா, அந்த பெண்ணை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தார். விசாரணையில் , அந்த பெண்ணின் பெயர்  பாலாம்பிகா என்பதும் குழந்தை அவருடையது அல்ல என்பது தெரிய வந்தது. அதோடு, சென்னையில் தங்கி படித்து வந்த மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு பிறந்த குழந்தை அது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

சென்னை கதீட்ரல் சாலை உள்ள ஸ்டெல்லா மேரி கல்லூரி பின்புறமுள்ள விடுதியில் மிசோரம் மாணவி தங்கி படித்து வந்துள்ளார். முறையற்ற உறவால் மிசோரம்  சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ளது. உடனடியாக , கல்லூரி மாணவிகள் மூன்று பேர் சேர்ந்து பவானி என்ற பெண்ணை தொடர்பு கொண்டு, குழந்தை இல்லாத தம்பதிகள் யாரிடமாவது கொடுத்து விடும் படி கூறி குழந்தையை  ஒப்படைத்துள்ளனர். 

பவானியிடத்திலிருந்து அந்த குழந்தையை  பாலாம்பிகை  வாங்கியுள்ளார். ஆனால், இது தொடர்பாக ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படுமோ என்று பயந்து போன பாலாம்பிகா, காவல் நிலையத்தில் சென்று குழந்தையை ஒப்படைத்து விட  கருதியுள்ளார். அந்த சமயத்தில்தான் பெண் காவலர் சித்ரா அவரை பிடித்து விசாரித்துள்ளார். தொடர்ந்து, கீழ்பாக்கம் போலீசார் குழந்தையை மீட்டு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்துனர். 

குழந்தையை கல்லூரி மாணவிகள் பணத்திற்காக விற்பனை செய்தார்களா? மிசோரம் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது யார் என்பது  குறித்து  கீழ்ப்பாக்கம் மகளிர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments