அம்மா மினி கிளினிக் திட்டம்.. மு.க.ஸ்டாலின் கேள்வி
ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ உபகரணங்கள் இல்லாத நிலையில், மினி கிளினிக் திட்டத்தை அரசு எவ்வாறு செயல்படுத்தும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் வெள்ளோடு அடுத்த குமாரவலசு பகுதியில், திமுக சார்பில் நடைபெற்ற மக்கள் கிராம சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, மக்களுடன் கலந்துரையாடினார். அதிமுக அரசை கடுமையாக விமர்சித்த அவர், சட்டமன்றத்தில் தன்னை பார்த்து சிரித்த காரணத்திற்காக ஓ.பன்னீர் செல்வம் பதவி நீக்கப்பட்டதாக கூறினார்.
ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ உபகரணங்கள் இல்லாத நிலையில், மினி கிளினிக் திட்டத்தை அரசு எவ்வாறு செயல்படுத்தும் என அவர் கேள்வி எழுப்பினார்.
கூட்டத்தில் பங்கேற்ற கார்த்திகா என்ற பெண், ஊரடங்கு காலத்தில் ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தின் கீழ், தனக்கு திமுகவினர் மருத்துவ உதவிகள் செய்ததாக கூறி, கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துக் கொண்டார்.
இங்கு கூட்டத்தை முடித்துக் கொண்டு, கரூர் மாவட்டத்திற்கு சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அங்கு, திறந்த வேனில் நின்றபடி பேசிய அவர், திமுக கூட்டணிக்கு 200 தொகுதிக்கும் மேல் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது என்றார்.
Comments