கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பு மருந்துகளுக்கு ஒப்புதல்

0 3598
கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பு மருந்துகளுக்கு ஒப்புதல்

சீரம் இன்ஸ்டிடியூட்டின் கோவிஷீல்டு, பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகிய தடுப்பு மருந்துகளின் அவசரப் பயன்பாட்டுக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ரா செனேக்கா நிறுவனங்கள் கண்டுபிடித்துள்ள கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்தை இந்தியாவில் தயாரிக்கவும், விற்கவும் புனேயைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் உரிமம் பெற்றுள்ளது. இதேபோல் ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுவுடன் இணைந்து கோவாக்சின் என்னும் தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ளன.

இந்த இரு நிறுவனங்களின் தடுப்பு மருந்துகளையும் தன்னார்வலர்களுக்குச் செலுத்தி ஏற்கெனவே இரண்டு கட்டச் சோதனைகள் முடிந்துள்ளன. மூன்றாம் கட்டச் சோதனை நடைபெற்று வரும் நிலையில், தடுப்பு மருந்துகளின் அவசரப் பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பிடம் நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தன.

இந்த விண்ணப்பங்களைப் பரிசீலித்த வல்லுநர் குழு ஒப்புதல் வழங்கலாம் என மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்புக்குப் பரிந்துரைத்தது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பின் தலைவர் சோமானி, கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பு மருந்துகளின் அவசரப் பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்தியாவில் இரண்டு கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு முதன்முறையாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் கோவாக்சின் தடுப்பு மருந்து உள்நாட்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.

கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பு மருந்துகள் நூறு விழுக்காடு பாதுகாப்பானவை என மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பின் தலைவர் சோமானி தெரிவித்தார். சற்றுப் பாதுகாப்புக் குறைபாடு இருந்தாலும் தாங்கள் ஒப்புதல் அளிப்பதில்லை எனக் குறிப்பிட்டார்.

இலேசான காய்ச்சல், வலி, ஒவ்வாமை ஆகிய சில பக்க விளைவுகள் அனைத்து வகைத் தடுப்பு மருந்துகளுக்கும் பொதுவானவை எனக் குறிப்பிட்டார். கொரோனா தடுப்பு மருந்துகளால் ஆண்மைக்குறைவு ஏற்படும் எனக் கூறப்படுவதை மறுத்த அவர், அது முற்றிலும் தவறான தகவல் எனத் தெரிவித்தார். கொரோனா தடுப்பு மருந்துகளின் அவசரப் பயன்பாட்டுக்கு இந்தியா ஒப்புதல் வழங்கியுள்ளதை உலக நலவாழ்வு அமைப்பு வரவேற்றுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments