நாடு முழுவதும் 3 கோடி பேருக்கு முதல்கட்டமாக இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் - அமைச்சர் ஹர்ஷ் வர்தன்

0 1732

நாடு முழுவதும் 3 கோடி பேருக்கு முதல்கட்டமாக கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் அறிவித்துள்ளார்.

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து சீரம் இந்தியா நிறுவனம் தயாரித்துள்ள கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் ஆகிய இரண்டு கொரோனா தடுப்பு மருந்துகளை அவசர கால பயன்பாட்டுக்கு பயன்படுத்த மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர்க் குழு மத்திய அரசிடம் பரிந்துரைத்துள்ளது.

இதற்கு மத்திய அரசு விரைவில் ஒப்புதல் அளிக்க இருக்கிறது. தமிழகத்தில் 5 மாவட்டங்கள் உள்பட நேற்று நாடு முழுவதும் நடைபெற்ற தடுப்பூசி ஒத்திகை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் இரண்டு வாரங்களுக்குள் ஒருகோடி சுகாதாரத்துறையினருக்கும் 2 கோடி முன்களப் பணியாளர்களுக்கும் இலவசமாகவே கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் ஹர்ஷ்வரதன் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து 50 வயதுக்கு அதிகமானோருக்கும், 50க்கு குறைந்த வயதில் அதிகமான பாதிப்புடையோருக்கும் என 27 கோடி பேருக்கு அடுத்த ஆறுமாதங்களில் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி போடுவதற்கு முன்பதிவு செய்யும் கோ-வின் செயலியில் இதுவரை 75 லட்சம் பேர் தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருப்பதாகவும் தெரிவித்த ஹர்ஷ்வரதன், மக்கள் தடுப்பூசி குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். போலியோ தடுப்பூசி வந்த போதும் இது போன்ற வதந்திகள் பரவின என்று சுட்டிக் காட்டிய மத்திய அமைச்சர் , இன்று போலியோ ஒழித்துக் கட்டப்பட்டது போல கொரோனாவும் நிச்சயமாக ஒழிக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments