மு.க.ஸ்டாலின் கூட்டத்தில் சலசலப்பு.. திமுக தொப்பி அணிந்து வந்து ரகளை செய்த அதிமுக பெண்..!
கோவை தேவராயபுரத்தில், மு.க.ஸ்டாலின் நடத்திய மக்கள் கிராம சபை கூட்டத்தில் அதிமுகவை சேர்ந்த பெண் புகுந்து, பெரும் ரகளையை ஏற்படுத்தியதால் பரபரப்பு உருவானது. அந்தப் பெண் கலவரம் செய்யும் நோக்கத்துடன் அமைச்சர் வேலுமணியால் அனுப்பப்பட்டவர் என குற்றம்சாட்டிய மு.க.ஸ்டாலின், இது தொடர்ந்தால் முதலமைச்சர் கூட கூட்டம் நடத்த முடியாத நிலை ஏற்படும் என எச்சரித்தார்.
கோவை தேவராயபுரத்தில் மு.க.ஸ்டாலின் நடத்திய மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் பெண் ஒருவர் எழுந்து, தானும் கேள்விகேட்க வேண்டும் என்றார். அந்தப் பெண்ணிடம் எந்த ஊர் என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியபோது மயில்கல் என பதிலளித்தார். அது எந்த தொகுதியில் உள்ளது என மு.க.ஸ்டாலின் கேட்டபோது இதுகூடத் தெரியாமல்...என அந்தப் பெண் ஏகவசனத்தில் பேசியதால், அங்கிருந்தவர்கள் கோபமடைந்தனர். விரலை உயர்த்தி ஆவேசத்துடன் அந்தப் பெண் சரிக்கு சமமாக ஆவேசமடைந்ததால் களேபரம் உருவானது.
சலசலப்புக்கு காரணமான பெண், அமைச்சர் வேலுமணியால் அனுப்பப்பட்டவர் எனக் கூறிய மு.க.ஸ்டாலின், மேடம் நீங்கள் இங்கிருந்து வெளியேறிவிடுங்கள் என மரியாதையுடன் அறிவுறுத்தினார். மேலும் அந்தப் பெண்ணை தாக்கி விடவேண்டாம் என்று சூழ்ந்திருந்தவர்களை கேட்டுக்கொண்டார்.
பின்னர் அந்தப் பெண்ணை, கூட்டத்தில் பங்கேற்ற பெண்கள் சிலர் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.
ரகளை செய்தவர் வேலுமணியின் பக்கத்து வீட்டுப் பெண் என்றும், திமுக தொப்பியை வாங்கி வைத்துக் கொண்டு கூட்டத்தில் புகுந்துவிட்டதாகவும் மு.க.ஸ்டாலின் கூறினார்.
வேலுமணி இதுபோன்ற கலவர முயற்சிகளை தொடர்ந்தால், தமிழகத்தில் அவர் மட்டுமல்ல, முதலமைச்சர் கூட கூட்டம் போட முடியாத நிலை ஏற்பட்டு விடும் என மு.க.ஸ்டாலின் எச்சரித்தார்.
இதனிடையே, கூட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பெண்ணை சிலர் துரத்தி துரத்தி தாக்க முயன்றனர். அந்த பெண்ணுக்கு ஆதரவாக வந்த ஆண் ஒருவரை சிலர் நையப்புடைத்தனர்.
தாக்குதல் நடத்தியவர்களிடம் இருந்து அந்த பெண் மற்றும் அவருக்கு துணையாக வந்தவரை போலீசார் மீட்டு தொண்டாமுத்தூர் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் யாரிடமோ நடந்த விவரங்களை செல்ஃபோனில் விவரித்துக் கொண்டிருந்தார்.
அந்த பெண்ணின் பெயர் பூங்கொடி என்றும், அதிமுக மாவட்ட மகளிர் பாசறை துணைத் தலைவி என்றும், உடனிருந்தவர் அதிமுக ஆதி திராவிடர் நலக்குழு உறுப்பினர் ராஜன் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments