புத்தாண்டு பரிசாக கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசிக்கு நிபுணர்க்குழு ஒப்புதல்... மத்திய அரசுக்குப் பரிந்துரை...
இந்திய மக்களுக்கு புத்தாண்டு பரிசாக ஆக்ஸ்போர்ட்டின் கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசிக்கு, மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர்க்குழு ஒப்புதல் அளித்து அவசரகால பயன்பாட்டுக்கு மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.
இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்தியாவின் பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான சீரம் இந்தியா தயாரிக்கும் கோவிஷீல்டு தடுப்பூசி மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்தின் இறுதிக்கட்டப் பரிசோதனைகளை வெற்றிகரமாக முடித்துள்ளன.
இங்கிலாந்தில் கோவிஷீல்டு மருந்துக்கு அதிகாரப்பூர்வமான ஒப்புதல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நேற்று இந்திய மருந்து தரகட்டுப்பாட்டு அமைப்பை சேர்ந்த நிபுணர்க் குழுவினர் அவசர கால பயன்பாட்டுக்கு கோவிஷீல்ட் தடுப்பூசியை அனுமதிப்பது குறித்து ஆலோசனை நடத்தினர்.
பல மணி நேரம் நீடித்த இந்த ஆலோசனைக்குப் பின் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திடம் கோவிஷீட்ட் தடுப்பூசியைப் பயன்படுத்த பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன.
கோவிஷீல்ட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட போதும் கோவாக்சின் தடுப்பூசிக்கு இன்னும் கூடுதலான விவரங்களை வழங்குமாறு கேட்டுள்ள நிபுணர்க்குழு அதன் மீதான முடிவை ஒத்தி வைத்துள்ளது.
ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள கோவிஷீல்ட் மருந்து இன்னும் ஏழு அல்லது பத்து நாட்களுக்குள் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தடுப்பூசிக்கு சீரம் நிறுவனம் 250 ரூபாய் என விலை நிர்ணயம் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஜூலை மாதத்திற்குள் 30 கோடி பேருக்குக் கொரோனா தடுப்பூசியை செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது .முதல்கட்டமாக சுகாதாரத்துறையினருக்கு இந்த தடுப்பூசி போடப்படும். அவசர கால பயன்பாட்டுக்கு 4 முதல் 6 வார இடைவெளியில் இரண்டு முழு டோஸ்கள் செலுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதல் 10 கோடி டோஸ்களுக்கான செலவுகள் பி.எம்.கேர்ஸ் என்ற பிரதமரின் அறக்கட்டளை சார்பாக ஏற்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Comments