சென்னை பெரும்பாக்கத்தில் 116 கோடி ரூபாய் மதிப்பில் 1,152 வீடுகள் கட்டும் திட்டம்... பிரதமர் அடிக்கல் நாட்டினார்...
சென்னை, பெரும்பாக்கம் பகுதியில் 116 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் 1,152 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டும் திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.
இந்தூர், ராஜ்கோட், சென்னை, ராஞ்சி, அகர்தாலா, லக்னோ ஆகிய 6 நகரங்களில் எல்ஹெச்பி வீட்டு வசதித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். தமிழகம், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், குஜராத், ஜார்க்கண்ட், திரிபுரா முதலமைச்சர்களின் முன்னிலையில் அடிக்கல் நாட்டப்பட்டது.
நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இத்தகைய திட்டங்களில் மத்திய அரசுடன் கூட்டாக செயல்படுவதில் தமிழக அரசு மகிழ்ச்சி கொள்வதாக தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, அடிக்கல் நாட்டப்பட்டுள்ள 6 திட்டங்களும், நாட்டின் வீட்டு வசதித் திட்டங்களுக்கு புதிய வழியை காட்டும் என்றும், மத்தி-மாநில அரசுகளின் கூட்டுறவுக் கூட்டாட்சியை வலுப்படுத்தும் என்றும் குறிப்பிட்டார்.
இதனிடையே, எல்ஹெச்பி வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், சென்னை, பெரும்பாக்கம் பகுதியில் 116.27 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 1,152 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதில் பயன்படுத்தப்படும் புதிய தொழில்நுட்ப முறையானது, தரமான கட்டுமானம், மாறுபட்ட தட்பவெட்ப நிலைகளை எதிர்கொள்வது, சுற்றுசூழலுக்கு உகந்த, நீடித்த மற்றும் பேரிடர்களை எதிர்கொள்ளும் வல்லமையோடு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டப் பகுதி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் துணை மின்நிலையமும் கொண்டிருக்கும். சென்னை மாநகரின், நதிக்கரைகள் மற்றும் இதர ஆட்சேபகரமான பகுதிகளில் வாழும் நகர ஏழை குடும்பங்கள் மற்றும் குடிசைப்பகுதி வாழ் குடும்பங்களுக்கு இக்குடியிருப்புகளின் கட்டுமானப் பணிகள் முடிவுற்றவுடன் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Comments