இந்திய பெருங்கடல் பரப்பில் நீருக்கடியில் அபாயத்தை ஏற்படுத்துகிறதா சீனா?... 12 ஆழ்கடல் டிரோன்களை நிறுவியுள்ளதாக தகவல்
இந்திய பெருங்கடல் பரப்பில், தண்ணீருக்கு அடியில், கண்காணிப்பை மேற்கொள்ள வல்ல, ஆழ்கடல் டிரோன்களை சீனா பயன்படுத்துவதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கு மிதக்கும் கடற்பறவை எனப் பொருள்படும் வகையில், "Sea Wing Glider" எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஆழ்கடல் டிரோன்கள், பல மாதங்களுக்கு தொடர்ந்து இயங்க வல்லவை ஆகும். இந்த டிரோன்கள் மூலம், எதையும் தாக்க இயலாது என்றாலும், கடற்பரப்பில் செல்லும் கப்பல்களின் நடமாட்டம், நீர்மூழ்கி கப்பல்களின் நடமாட்டம், கடலுக்குடியில் உள்ள சூழல் உள்ளிட்டவற்றின் தகவல்களை சேகரிக்க இயலும்.
அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக, ஆழ்கடல் கண்காணிப்பு-உளவு டிரோன்களை சீனா பயன்படுத்துகிறது. இந்த வகையில், இந்திய பெருங்கடல் பரப்பில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ள தொடர்ந்து முயற்சிக்கும் சீனா, 12 ஆழ்கடல் கண்காணிப்பு டிரோன்களை நிறுவியிருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது.
Comments