வாகனங்களில் பாஸ்டேக் பொருத்துவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு
நான்கு சக்கர வாகனங்களுக்கு ஜனவரி 1 முதல் ஃபாஸ்டேக் கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த முறைக்கு மாறுவதற்கான அவகாசம் பிப்ரவரி 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் தற்போது ஃபாஸ்டேக் நடைமுறையில் இருந்தாலும், 75 முதல் 80 சதவீதம் மட்டுமே மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ரொக்கமாக கட்டணம் செலுத்தி வாகனங்கள் செல்ல ஒரு வரிசை மட்டும் அனுமதிக்கப்படுகிறது. இதற்கும் முற்றுப்புள்ளி வைத்து 100 சதவீதம் ஃபாஸ்டேக் மூலம் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்திருந்தது.
தற்போது இந்த அவகாசம் பிப்ரவரி 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், ஃபாஸ்டேக் வரிசையில் சென்று ரொக்கமாக செலுத்த முயற்சி செய்தால் இரு மடங்காக கட்டணம் செலுத்த நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
Comments