அனில் அம்பானி நிறுவனங்களின் கணக்குகள் போலி
அனில் அம்பானி நடத்தி வந்த ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் உள்ளிட்ட 3 நிறுவனங்களின் கணக்குகள் மோசடியானவை எனக் கருதுவதால், அதுகுறித்து தீவிர விசாரணை நடத்த கடன் வழங்கிய வங்கிகள் திட்டமிட்டுள்ளன.
அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ரிலையன்ஸ் இன்ஃபராடெல் மற்றும் ரிலையன்ஸ் டெலிகாம் ஆகிய நிறுவனங்கள் மூலம் பாரத ஸ்டேட் வங்கி, யூனியன் வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிகளில் 86 ஆயிரத்து 188 கோடி ரூபாய் வரை கடன் பெற்றதாகக் கூறப்படுகிறது.
ஆனால் இந்த நிறுவனங்களின் கணக்குகள் போலியானவை என்றும், மோசடியானவை என்றும் மேற்கண்ட வங்கிகள் கருதுவதால், இந்தக் கணக்குகள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்று வங்கிகள் தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக யூனியன் வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தொடர்ந்த வழக்கில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்றும், அடுத்தகட்ட விசாரணை ஜனவரி 13ம் தேதி நடைபெறும் என்றும் டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் மூலம் 49 ஆயிரத்து 193 கோடி ரூபாயும், ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனம் மூலம் 24 ஆயிரத்து 306 கோடி ரூபாயும், ரிலையன்ஸ் இன்ஃப்ரா டெல் நிறுவனம் மூலம் 12 ஆயிரத்து 687 கோடி ரூபாயும் அனில் அம்பானி கடனாகப் பெற்றுள்ளார். இந்தத் தொகை விஜய் மல்லையா, நீரவ் மோடி ஆகியோரின் வங்கிக் கணக்கு மோசடியை விட 10 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments