கடைசி வரை போராட்டம் நடத்திய காமராஜர் தொண்டன்... யார் இந்த தமிழருவி மணியன்?

0 10091

நடிகர் ரஜினிகாந்த்தை முன் வைத்து காமராஜர் ஆட்சியை மீண்டும் கொண்டு வர வேண்டுமென்று கடும் போராட்டம் நடத்திய தமிழருவி மணியன் கடைசியில் அரசியலை விட்டே விலகி விட்டார்.


தமிழருவி மணியன் மிகச்சிறந்த பேச்சாளர் என்பதில் மாற்றுக்கருத்தே கிடையாது. பாரதியாரை பற்றியும் பாரதிதாசனை பற்றியும் தமிழ் இலக்கியங்களையும் மணிக்கணக்கில் பேசும் திறமை படைத்தவர். தெய்வசிகாமணி என்பது இவருக்கு பெற்றோர் வைத்த பெயர். பள்ளி ஆசிரியராக சிறிது காலம் பணியாற்றியவர். மெத்த படித்த இவரின் வாயிலிருந்து தமிழ் அருவி போல கொட்டியதைப் பார்த்த காமராஜர்தான், முதன் முதலில் 'தமிழருவி' என்று அழைத்தார். தன் தலைவர் மீது கொண்ட பற்றால் தமிழருவி என்ற பெயரை தன் பெயருடன் இணைத்து தமிழருவி மணி என்று மாற்றிக் கொண்டார்.

ஆனால், நல்லதொரு அரசியல் வாழ்க்கை என்பதுதான் கடைசி வரை தமிழருவி மணியனுக்கு கை கூடி வரவில்லை. தமிழருவி மணியனுக்கு நல்லதொரு அரசியல் நடத்து வாய்ப்பு நெருங்கி வந்தாலும் கடைசிகட்டத்தில் எட்டாக்கனியாகவே  அமைந்து விட்டது. அதற்கு, ரஜினி பொலிட்டிக்கல் என்ட்ரியை உதாரணமாக சொல்லாம்.

தமிழருவி மணியன் காமராஜர் தொண்டராக தமிழ் மக்களிடம் பரவலாக அறியப்பட்டவர். காமராஜர் காலத்தில் அவருடன் காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றினார். காமராஜர் தொடங்கிய ஸ்தாபன காங்கிரஸில் இருந்தார். காமராஜரின் மறைவுக்குப் பிறகு, தமிழருவி மணியன் ஜனதா கட்சியில் இணைந்து கர்நாடக முன்னாள் முதல்வர் ராமகிருஷ் ஹெக்டேவுடன் பணியாற்றினார். பின்னர், ராமகிருஷ்ண ஹெக்டே, ஜனதா கட்சியிலிருந்து வெளியேறி லோக்சக்தி என்ற கட்சியைத் தொடங்கிய போது, தமிழ்நாடு தலைவராக தமிழருவி மணியன் செயலாற்றினார்.   தி.மு.க முன்னாள் தலைவர் கருணாநிதியுடனும் தமிழருவி மணியன் நெருக்கமாக இருந்த காலம் உண்டு. 

பிறகு, தி.மு.க வில் இருந்து வைகோ பிரிந்த போது, அவருக்கு ஆதரவாக சில காலம் பணியாற்றினார். வைகோவை முதல்வராக்குவது வாழ்நாள் லட்சியம் என்று பேசி வந்தார். காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி ஜி.கே.மூப்பனார் தமிழ் மாநில காங்கிரஸ் கண்ட போது அதில் தன்னை இணைத்துக் கொண்டார். மூப்பனார் மற்றும் அவரின் மகன் ஜி.கே. வாசன் ஆகியோரிடத்தில் நெருக்கம் வைத்திருந்தார். பின்னர், தமிழ் மாநில காங்கிரஸ் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைக்கப்பட்ட போது, அதில் பணியாற்றினார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறினார். தொடர்ந்து 2014 - ம் ஆண்டு காந்திய மக்கள் இயக்கம் என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கினார். இந்த காலக்கட்டத்தில் மதுவுக்கு எதிரான போராட்டங்களை நடத்தி வந்தார். ஒரு கால கட்டத்தில் நடிகர் ரஜினிகாந்தையும் தமிழருவி மணியன் கடுமையாக விமர்சித்தது உண்டு. பின்னர், என்ன காரணத்தினாலோ ரஜினிகாந்த் மீது பிடிப்பு ஏற்பட்டது.  ரஜினிகாந்தின் பின்னால் அணி திரள தொடங்கினார் மணியன்.

பல ஆண்டுகள் ரஜினியுடன் கடுமையாக போராடி அவரை அரசியலுக்குள் 90 சதவிகிதம் இழுத்தே வந்து விட்டார். அதன் விளைவாகவே டிசம்பர் 3 ம் தேதி நடிகர் ரஜினிகாந்த் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட்ட போது, தமிழருவி மணியன் முகத்தில் ஒருவித  வெற்றி பெருமிதத்தைக் காண முடிந்தது. ஆனால், அடுத்த 25 நாள்களில் பல சம்பவங்கள் நிகழ்ந்து ரஜினிகாந்த் கட்சி தொடங்கப் போவதில்லை என்று அறிவித்து விட,  தமிழருவி மணியனின் 53 வருட கால அரசியல் வாழ்க்கை அஸ்தமித்து விட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments