கணவரின் மரணத்திற்கு காரணம் என்ன? கைக்குழந்தையுடன் 6 மாதமாக அலையும் மனைவி

0 12704

முழு ஊரடங்கு காலத்தில் மலேசியாவில் இருந்து சென்னை வந்து நட்சத்திர விடுதியில் தனிமைபடுத்தப்பட்டிருந்த நபர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், 6 மாத காலமாகியும் தனது கணவர் மரணத்திற்கான காரணம் தெரியாமல் கைக்குழந்தையுடன் அலுவலகம் அலுவலகமாக அலைந்து வரும் மனைவியின் தவிப்பு குறித்து விவரிக்கிறது இந்த செய்திதொகுப்பு...

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே நித்தி நத்தம் கிராமத்தை சேர்ந்த சுந்தரவேல், மலேசியாவில் ஜேசிபி ஆப்ரேட்டராக வேலை செய்து வந்தார். கடந்த ஜூன் மாதம் 25-ந் தேதி சிறப்பு விமானம் மூலம் சென்னை திரும்பிய அவர் கொரோனா பரிசோதனைக்கு பிறகு, தன்னை தானே தனிமைப்படுத்திக் கொள்ளும் பொருட்டு, தேனாம்பேட்டையிலுள்ள ஹயாத் நட்சத்திர விடுதியில் சொந்த செலவில் தனி அறை எடுத்து தங்கியிருந்துள்ளார்.

இரண்டு, மூன்று நாட்களாக சுந்தரவேலிடம் இருந்து தொலைபேசி அழைப்புகள் ஏதும் வராததால், சந்தேகமடைந்த குடும்பத்தினர் நட்சத்திர ஹோட்டல் நிர்வாகத்தை தொடர்பு கொண்டுள்ளனர்.

2 நாட்களாக சுந்தரவேலை காணவில்லை என தெரிவித்த ஹோட்டல் ஊழியர்கள், பின்னர், 29-ந் தேதி அன்று சுந்தரவேல் கழிவறையில் சடலமாக கிடப்பதாக குடும்பத்தினரை தொடர்பு கொண்டு தகவல் அளித்துள்ளனர். உடலை பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா இல்லை என தெரியவந்தது.

மேலும், மரணத்திற்கான காரணத்தை பிரேத பரிசோதனை அறிக்கையில் தான் தெரியவரும் என அதிகாரிகள் கூறவே, அதனை நம்பி குடும்பத்தினர் உடலை பெற்றுக்கொண்டு இறுதி சடங்குகளை செய்து முடித்துள்ளனர்.

அதன் பிறகு 4 மாதங்களுக்கு மேல் ஆகியும் பிரேத பரிசோதனை அறிக்கையும் வரவில்லை, சுந்தரவேலின் மரணத்திற்கான காரணமும் தெரியவில்லை. இதற்காக தான் கைக்குழந்தையுடன் அலையாத அரசு அலுவலகங்களே இல்லை என கண்ணீர் வடிக்கிறார் மனைவி சந்திரா.

ஒருவழியாக அங்கும், இங்கும் அலைந்து திரிந்து, கடந்த அக்டோபர் மாதம் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளது. ஆனால், அந்த அறிக்கையிலும் சுந்தரவேல் மரணத்திற்கான காரணத்தை குறிப்பிடாமல் தடயவியல் ஆய்வுக்காக பரிந்துரைப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. தடயவியல் அறிக்கையிலாவது கணவரின் மரணத்திற்காக காரணம் தெரியவரும் என காத்திருந்த மனைவிக்கு மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியது. 2 மாதமாக தடயவியல் அறிக்கையும் வரவில்லை.

தனிமைபடுத்தப்பட்டிருந்த தனது கணவருக்கு ஏதோ உடல்நலக்குறைவு ஏற்பட்டு தான் கழிவறைக்குள் இறந்து கிடந்ததாகவும், அதனை ஹோட்டல் ஊழியர்களும் சரியாக கவனிக்க வில்லை என்றும் சந்திரா குற்றம்சாட்டியுள்ளார். மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் தனது கணவரை கண்காணிக்க தவறியதாக அவர் புகார் கூறியுள்ளார்.

கணவரின் மரணத்திற்கான காரணத்தை தெரிந்து கொள்ள கைக்குழந்தையுடன் மனைவி போராடி வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments