வெல்லத்தில் கலக்கப்படும் ரசாயனங்கள்!....நடவடிக்கை எடுக்கக்கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
தர்மபுரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகைக்காக வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ள நிலையில், வெல்லத்தில் ரசாயனம் கலப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தருமபுரி மாவட்டத்தில் பாடி, பாப்பாரப்பட்டி, முத்துக்கவுண்டன்கொட்டாய், கடகத்தூர், பாலக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் கரும்பு சாறிலிருந்து வெல்லம் உற்பத்தி செய்யும் ஆலைகள் அதிகளவில் செயல்படுகின்றன. தீபாவளி மற்றும் பொங்கல் நாட்களில் இப்பகுதிகளில் வெல்லம் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டு வெளி மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த வெல்லம் அதிகளவில் இனிப்பு வகைகள் தயாரிக்கப் பயன்படுன்றன. தற்போது, பொங்கல் பண்டிகைக்கு இரண்டு வாரங்களே எஞ்சியுள்ள நிலையில், தருமபுரி மாவட்டத்தில் கரும்பு சாற்றின் மூலம் வெல்லம் உற்பத்தி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தர்மபுரியில் ஒரு சில வெல்லம் உற்பத்தி செய்யும் ஆலைகளில் அதிக லாப நோக்கத்துக்காக ரசாயணங்கள் கலக்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வெல்லம் நல்ல நிறத்துக்காகவும், சுவைக்காகவும், அதிக எடைக்காகவும் பெயிண்ட்டை பிரித்தெடுக்கும் கெமிக்கலான காஸ்ட்ரிக் சோடா, சோடாபை கார்ப்னேட், சோப்பு பவுடர், மைதா, ஹெட்ரோஸ்,சோடியம் சல்பெட், பிளிச்சிங் பவுடர்,சூப்பர் பாஸ்போர்ட் உள்ளிட்டவை வெல்லத்தில் கலக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த ரசாயணங்கள் உடலுக்கு பல்வேறு தீங்குகள் ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக, இது போன்ற ரசாயனங்கள் கலந்த வெல்லம் மூலம் தயாரிக்கப்படும் இனிப்புப் பதார்த்தங்களை சாப்பிடுவதன் மூலம் பொதுமக்களுக்கு கேன்சர், அல்சர், வாந்தி, மயக்கம் ஆகியவை ஏற்படும். இதனால் மாவட்டத்தில் உள்ள வெல்லம் தயாரிக்கும் ஆலைகளை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments