அரசியலுக்கு வரவில்லை, கட்சியும் தொடங்கப் போவதில்லை: ரசிகர்கள் மன்னிக்க வேண்டுகோள் - நடிகர் ரஜினிகாந்த்

0 18261
அரசியல் கட்சி துவங்கப்போவதில்லை - நடிகர் ரஜினிகாந்த்

கட்சி தொடங்கப் போவதில்லை என்றும், தேர்தல் அரசியலுக்கு வரும் முடிவை கைவிட்டு விட்டதாகவும் கூறியுள்ள ரஜினி, அதற்காக ரசிகர்களும் ஆதரவாளர்களும் மன்னிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

மருத்துவர்களின் அறிவுரையையும் மீறி ஹைதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்புக்கு சென்றதாகவும், அங்கு 4 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டு தனக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு நெகடிவ் என்ற வந்ததாகவும் ரஜினிகாந்த் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால் ரத்தக் கொதிப்பில் அதிக ஏற்றத்தாழ்வு ஏற்பட்டதாகவும், இந்த நிலை தன்னுடைய மாற்று சிறுநீரகத்தை கடுமையாகப் பாதிக்கக் கூடியது என்பதால், 3 நாட்கள் மருத்துவமனையில் மருத்துவக் கண்காணிப்பில் இருக்க நேரிட்டதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தன்னுடைய உடல்நிலை காரணமாக, படப்பிடிப்பு ரத்தாகி பல பேருக்கு வேலை இழப்பு, பல கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டதாகக் கூறியுள்ள ரஜினி, இதை தனக்கு ஆண்டவன் கொடுத்த ஒரு எச்சரிக்கையாகவே பார்ப்பதாகவும் கூறியுள்ளார். கட்சி ஆரம்பித்த பிறகு, ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் மூலமாக மட்டும் பிரச்சாரம் செய்தால், மக்கள் மத்தியில் தான் நினைக்கும் அரசியல் எழுச்சியை உருவாக்கி, தேர்தலில் பெரிய வெற்றியை பெறமுடியாது என ரஜினி தெரிவித்துள்ளார்.

120 பேர் கொண்ட குழுவிலேயே 4 பேருக்கு கொரோனா பாதித்து, தான் 3 நாட்கள் மருத்துவக் கண்காணிப்பில் இருக்க நேர்ந்தது என்றும், கொரோனா உருமாறி புதுவடிவம் பெற்று இரண்டாவது அலையாக வந்து கொண்டிருப்பதாகவும், கட்சி தொடங்கி பிரச்சாரத்திற்கு சென்றால் லட்சக் கணக்கானோரை சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். 

தடுப்பூசி வந்தால்கூட நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் மருந்துகளை சாப்பிடும் தான், கொரோனா காலத்தில் மக்களை சந்தித்து பிரச்சாரத்தின்போது தன் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டால், தன்னை நம்பி, தன்னுடன் அரசியல் பயணம் மேற்கொண்டவர்கள் பல சிக்கல்களையும் சங்கடங்களையும் எதிர்கொண்டு மனரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பல துன்பங்களை சந்திக்க நேரிடும் என ரஜினி குறிப்பிட்டுள்ளார்.

தன் உயிர் போனாலும் பரவாயில்லை அரசியலுக்கு வருவேன் என்று சொல்லிவிட்டு அவ்வாறு நடந்துகொள்ளவில்லை என்றால் நாலு பேர் நாலுவிதமாக பேசுவார்கள் என்பதற்காக, தன்னை நம்பி தன்கூட வருபவர்களை பலிகடா ஆக்க விரும்பவில்லை என ரஜினி விளக்கம் அளித்துள்ளார். எனவே, கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வரமுடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்வதாகவும் இதை அறிவிக்கும்போது தனக்கு ஏற்பட்ட வலி தனக்கு மட்டும்தான் தெரியும் என்றும் ரஜினி தெரிவித்துள்ளார்.

இந்த முடிவு ரஜினி மக்கள் மன்றத்தினருக்கும், தான் கட்சி தொடங்குவேன் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும் மக்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும், என்னை மன்னியுங்கள் என ரஜினி உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளார். தன் சொல்லுக்கு கட்டுப்பட்டு 3 ஆண்டுகளாக சேவை செய்திருப்பதன் மூலம் கிடைக்கும் புண்ணியம், மக்கள் மன்றத்தினரையும் அவர்களது குடும்பத்தையும் காப்பாற்றும், ரஜினி மக்கள் மன்றம் என்றும்போல் செயல்படும், தேர்தல் அரசியலுக்கு வராமல் மக்களுக்கு தன்னால் இயன்ற சேவையை செய்வேன் என ரஜினி கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments