தான் வாழ மற்ற இனங்களை குடியோடு அழிக்கும்... உள்ளூர் மீன்களுக்கு வில்லனாக மாறிய ஆப்ரிக்க கெளுத்தி!
தான் வாழ பிற மீன் இனங்களை குடியோடு அழிக்கம் ஆப்ரிக்க கெளுத்தி மீன்களை வளர்ப்பதை அறவே தவிர்க்க வேண்டுமென்று மீனவர்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நம் நாட்டில் குளத்து , ஏரி மீன்களின் கெளுத்தி மீன்கள் மிக முக்கியமானவை. நம் நாட்டைச் சேர்ந்த கெளுத்தி மீன்களை உண்பதால் எந்த பாதிப்பும் இல்லை. சுவையாகவும் சத்தானதும் கூட. ஆனால், சமீப காலகமாக நமது நீர்நிலைகளில் ஆப்ரிக்க கெளுத்தி மீன்களை பலரும் வளர்க்கத் தொடங்கியுள்ளனர். மீன் இனங்களில் ஆப்ரிக்க கெளுத்தி இனங்கள் மிகவும் ஆபத்தானவை. இந்த வகை மீன்கள் ஒரே சீசனில் 4 லட்சம் முட்டைகள் இடக் கூடியவை. ஆனால், நம் நாட்டு கெளுத்தி மீன்கள் 15,000 முட்டைகள் வரைதான் இடும். இதனால், நாளடைவில் இந்த மீன்களின் எண்ணிக்கை பல்கி பெருகி நம் நாட்டு மீன் இனங்களே அழித்து விடும்.
ஏனென்றால், இந்த மீன்கள் பிற மீன் இனங்களை உண்டு வாழக்கூடியது. தன் இனத்தை சேர்ந்த மீன்களையும் சாப்பிடும் குணம் கொண்டது. சாக்கடை நிறைந்த தண்ணீரிலும் , காற்றை குடித்து கூட உயிர் வாழும் திறன் கொண்டது. அதோடு, இந்த மீன்கள் தண்ணீரில் உள்ள ஈயம், பித்தளை போன்ற உலோகங்களை அதிகளவில் சாப்பிடுகின்றன. இதனால், இந்த மீன்களை மனிதர்கள் உண்பதும் ஆபத்தானது என்கிறார்கள். இதனால்தான் ஆப்ரிக்க கெளுத்தி மீன்களை வளர்க்க மத்திய மாநில அரசுகள் தடை விதித்துள்ளன. ஆனாலும், ஆங்காங்கே ஆப்ரிக்க கெளுத்தி மீன்களை சிலர் வளர்த்து வருகிறார்கள். இறைச்சி கடைகளில் இருந்து கிடைக்கும் கழிவு பொருட்களை இந்த மீன்களுக்கு உணவாக அளிக்கிறார்கள். இதனால் தோல் நோய், புற்று நோய் வரும் அபாயம் உள்ளது.
இந்த நிலையில், ஓசூரில் தென்பெண்ணை நதி பகுதியில் பல இடங்களில் ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள் வளர்க்கப்படும் தகவல் கிடைத்தது. இதையடுத்து , தென்பெண்ணை கரையோரப் பகுதிகளான பாகலூர் புதிநாத்தம், முத்தாலி ஆகிய பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த பகுதிகளில் உள்ள மீன் பண்ணைகளில் இருந்த தண்ணீரை முழுமையாக வெளியேற்றினர். பிறகு, பண்ணையிலிருந்த ஆப்ரிக்க கெளுத்தி மீன்களை பிடித்து மண்ணில் குழி தோண்டி புதைத்தனர்.
Comments