இரும்புக்கடையில் 5,000 பள்ளி பாடப்புத்தகங்கள்! - மயிலாடுதுறையில் அதிர்ச்சி சம்பவம்

0 7560

மயிலாடுதுறையில் பழைய இரும்பு கடையில் மூட்டை மூட்டையாக கட்டி குவித்து வைக்கப்பட்டிருந்த நடப்பு கல்வி ஆண்டுக்கான 5,000 பாடப்புத்தகங்கள் கைப்பற்றப்பட்டன.

மயிலாடுதுறை முத்துவக்கீல் சாலையில் பெருமாள்சாமி என்பவர் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். இவரின் கடையில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வருவாய் துறையினருக்கு ரகசியதகவல் வந்தது. இதையடுத்து. மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் மகாராணி தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் பழைய இரும்பு கடைக்கு சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். சோதனையில் 2019 -20 ஆம் கல்வி ஆண்டுக்கான பாடப்புத்தகங்கள் 5,000 க்கும் மேற்பட்டவை பண்டல் பண்டலாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

வருவாய்த் துறையினர் மயிலாடுதுறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து,கடை உரிமையாளர் பெருமாள்சாமியை கைது செய்து விசாரித்தனர். பெருமாள் சாமி அளித்த தகவலின் பேரில் மயிலாடுதுறை கிட்டப்பா மேல்நிலைப்பள்ளியில் உள்ள புத்தக கிடங்கில் பணியாற்றும் மேகநாதன் என்பவரிடத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழக அரசு மாணவர்களின் நலன் கருதி விலையில்லாமல் வழங்கும் பள்ளி புத்தகங்களை பழைய இரும்பு கடையில் பதுக்கி வைத்த சம்பவம் அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments