மங்கி குல்லா டவுசர் பாண்டீஸ்..! சிசிடிவியால் சிக்கினர்
புதுச்சேரியை அடுத்த ஆரோவில் பகுதியில் உள்ள பங்களா வீடுகளுக்குள் புகுந்து நள்ளிரவில் நகைபறிப்பில் ஈடுபட்ட மங்கி குல்லா அணிந்த டவுசர் கொள்ளையனை காவல்துறையினர் கைது செய்தனர். ஒரு வருட திருடன் போலீஸ் கண்ணாமூச்சி ஆட்டத்துக்கு விடை கொடுத்த சிசிடிவி காட்சிகள் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..
காலில் போட வேண்டிய செருப்பு இடுப்பில்..! சட்டையும் வேட்டியும் கழற்றி வைத்து , தலையில் மங்கி குல்லா அணிந்து, கையில் கத்தியுடன் வீடு புகுந்து ஆரோவில் மக்களை அச்சுறுத்தி நகைகளை கொள்ளையடித்துச்சென்ற டவுசர் பாண்டி இவன் தான்..!
புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான ஆரோவில் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் கடந்த ஒருவருடமாக தனியாக இருக்கும் பங்களா வீடுகளை நோட்டமிட்டு வீடுபுகுந்து கொள்ளையடிப்பதை வழக்கமாக்கியுள்ளான் இந்த கொள்ளையன்
கடந்த வாரம் திருச்சிற்றம்பலம் பகுதியில் உள்ள சசிகுமார் என்பவரின் வீட்டின் பின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த டவுசர் கொள்ளையன், கத்தியை காட்டி மிரட்டி சசிகுமாரின் தாய் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலி மற்றும் அவரது வீட்டில் இருந்த சுமார் 39 சவரன் நகைகளை திருடி சென்றுள்ளான்.
சசிகுமார் அளித்த புகாரை அடுத்து ஆரோவில் போலீசார் தனிப்படை அமைத்து, திருட்டு நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு திருட்டு ஈடுபட்டவனை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் சந்தேகத்தின் அடிப்படியில் ஆரோவில் சாலையில் உள்ள ஒரு தனியார் விடுதி அருகே திருட்டு சம்பவத்தில் ஈடுபட முயன்ற புதுச்சேரி கரிக்கலாம்பாக்கம் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவனைக் கைது செய்து விசாரித்ததில், தான் ஒரு வருடமாக அந்த பகுதியில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பாலகிருஷ்ணன் திருடும் நகைகளை விற்றுக் கொடுப்பதில் வேலூரை சேர்ந்த ஆறுமுகம் உடந்தையாக இருந்தது தெரியவந்ததையடுத்து அவரையும் போலீசார் கைது செய்தனர்.
இருவரையும் கைது செய்த போலிசார் சிசிடிவி காட்சியில் பதிவான உருவம் அவர்கள் தான் என்று உறுதி செய்தனர். இதனை தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது இரவு நேரத்தில் சவுக்கு தோப்பில் உடைகளை கழற்றி வைத்துவிட்டு டவுசர் மற்றும் குல்லா மட்டுமே அணிந்துகொண்டு வீட்டுவளாகத்திற்குள் நுழைந்து முன்புற கதவை பூட்டிவிட்டு வீட்டின் பின் பக்க கதவை உடைத்து உள்ளே சென்று தங்க நகைகளை மட்டும் திருடிச்செல்வதை வாடிகையாக்கியது தெரியவந்தது.
கொள்ளையர்கள் இருவரையும் கைது செய்த போலிசார் அவர்களிடமிருந்து சுமார் 55 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்து இருவரையும் சிறையில் அடைத்தனர். இவர்கள் ஏற்கனவே தமிழகம் மற்றும் பெங்களூர் பகுதிகளில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு சிறையில் இருந்தவர்கள் என்பது குறிப்பிட்டதக்கது.
Comments