போக்குவரத்து போலீசார் இனி என்ன காரணம் சொல்ல போறாங்க ? சுங்கத்துறை நச் பதில்

0 28680
போக்குவரத்து போலீசார் இனி என்ன காரணம் சொல்ல போறாங்க ? சுங்கத்துறை நச் பதில்

சென்னை மணலி எம்.எஃப்.எல், சாத்தாங்காடு பகுதியில் கண்டெய்னர் லாரிகளை மறித்துப் போட்டுவிட்டு, போக்குவரத்து நெரிசலுக்கு சுங்கத்துறை சோதனை மையத்தை காரணம் காட்டிய போக்குவரத்து காவல்துறைக்கு சுங்கத்துறை அதிகாரி தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னை மணலி எம்.எஃப்.எல் சந்திப்பு, சாத்தாங்காடு, ராமகிருஷ்ணா நகர், எர்ணாவூர் சந்திப்பு பகுதிகளில் சாலைகளில் வழிநெடுக கண்டெய்னர் லாரிகளை மறித்து வைத்திருக்கும் போக்குவரத்து போலீசார் 100 ரூபாய் பணம் பெற்றுக் கொண்டு லாரிகளை விதியை மீறிச்செல்ல அனுமதிப்பதாக லாரி ஓட்டுனர்கள் குற்றஞ்சாட்டி இருந்தனர்.

அதற்கு சாலையோரம் கண்டெய்னர் லாரிகளை மறித்து வைத்திருந்த போக்குவரத்து போலீசாரோ, தாங்கள் புழுதிக்குள் நின்று நேர்மையாக கடமையாற்றுவதாகவும், கடற்கரை சாலையில் உள்ள சுங்கத்துறை சோதனை மையத்திற்குள் செல்ல கண்டெய்னர் லாரிகள் காத்திருப்பதால், நீண்ட வரிசை ஏற்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் காரணம் காட்டியதோடு, அங்கு தங்களுடன் நேரில் வந்தால் உண்மை தெரியும் என்று தெரிவித்தனர்.

போக்குவரத்து காவல்துறையினர் சொன்ன சுங்கத்துறை சோதனை மையத்தில் எந்த போக்குவரத்து நெரிசலும் இன்றி லாரிகள் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டு கொண்டிருந்தன. லாரிகளை மறித்துப்போட போக்குவரத்து போலீசார் கூறிய காரணம் பொய் என்பது அம்பலமானது.

சம்பந்தப்பட்ட போக்குவரத்து போலீசாருடன் சுங்கத்துறை சோதனை மையத்திற்கு சென்று விசாரித்தால் உண்மை தெரியும் என்று சமாளிக்க, அங்கு சென்று விசாரித்த போது சுங்கத்துறை பெயரை சொல்லி போலீசார் செய்யும் செயற்கை போக்குவரத்து நெரிசல் என்பது 100 சதவீதம் உறுதியானது.

சனிக்கிழமை முன்பு வரை எந்த ஒரு விதியையும் பின்பற்றாமல் லாரிகளை உள்ளே அனுமதித்ததாகவும், தற்போது புதிய உத்தரவு பின்பற்றப்பட்டு வருவதாகவும், விண்ணப்ப படிவம் 13 வைத்திருக்கும் லாரிகள் மட்டுமே சுங்கத்துறை சோதனை மையத்திற்குள் அனுமதிக்கப்படும் என்றும் மற்றவை, வெளியே அனுப்பப்படும் என்றும் சுங்கத்துறை அதிகாரி தெரிவித்தார். விண்ணப்ப படிவம் 13 இல்லாத கண்டெய்னர் லாரிகள் சாலைக்கே வரக்கூடாது என்றும் அவை புறநகர்ப் பகுதிகளில் உள்ள 22 பார்க்கிங் யார்டுகளில் நிறுத்தி வைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும், இதனை லாரி உரிமையாளர்கள் பின்பற்றுவதில்லை என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

தினமும் 300 கண்டெய்னர் லாரிகள் மட்டுமே சோதனைக்கு பின் துறைமுகத்திற்குள் செல்ல அனுமதிப்பதாக தெரிவித்த அவர், அந்த சோதனை மையத்திற்குள் 350 கண்டெய்னர் லாரிகளை நிறுத்தி வைக்க வசதியுள்ள நிலையில், பொறுப்பற்ற சில லாரி ஓட்டுனர்களின் செயல்பாடுகள் தான் போக்குவரத்து பாதிப்புக்குக் காரணம் என்று தெரிவித்தார் அந்த சுங்கத்துறை அதிகாரி.

ஆனால், அருகில் நின்றிருந்த டிரான்ஸ்போர்ட் ஏஜெண்ட் ஒருவர், தங்கள் நிறுவன லாரிகளுக்கு விண்ணப்ப படிவம் 13 கொடுத்தும் சுங்கத்துறை அதிகாரிகள் லாரியை உள்ளே அனுமதிக்கவில்லை என்றும், உள்ளே சோதனை செய்தபின் தட்டச்சு செய்வதற்கு என்று கூறி காத்திருக்க வைப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்

மொத்தத்தில் கையூட்டுக்கு ஆசைப்படும் போக்குவரத்து காவலர்கள் கனரக வாகனங்களை சாலையில் நிற்க அனுமதிப்பது தான் போக்குவரத்து நெரிசலுக்கு மூல காரணம் என்றும் அதனை கைவிட்டு, விதிமீறி சாலையோரம் கனரக வாகனத்தை நிறுத்திவைக்கும் லாரி உரிமையாளர்களுக்கு மும்பையை போல் 5 ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதித்தால் விதியைமீறி சாலையை ஆக்கிரமிக்கும் கனரக வாகனங்கள் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்கின்றனர் சட்ட நிபுணர்கள்.

அதே நேரத்தில் நாள் ஒன்றுக்கு 300 கண்டெய்னர் லாரிகள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் அந்த 300 கண்டெய்னர்களை மட்டும், குறிப்பிட்ட வரிசையில் இயக்க நடவடிக்கை மேற்கொண்டால் போக்குவரத்து நெரிசல் முற்றிலும் அகலும்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments