கருவிலேயே கலையாதவன்... இன்று உலகிலேயே அதிகம் சம்பாதிக்கிறான்!- ரொனோல்டோவுக்கு மறைந்திருக்கும் சோகக் கதை
இந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற கால்பந்து வீரராக தேர்வு செய்யப்பட்ட ரொனால்டோவின் கருவை கலைக்க அவரின் தாயார் முயன்றார். ஆனால், அந்த ரொனால்டோவின் வருமானம் ஆண்டுக்கு ரூ 750 கோடி என்றால் நம்ப முடிகிறதா?
கால்பந்து உலகிலேயே அதிகம் சம்பாதிப்பவர் போர்ச்சுகல் அணியின் கேப்டனும் யுவென்டஸ் அணியின் ஸ்ட்ரைக்கருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ. கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு கால்பந்து விளையாடுவதன் மூலமாக மட்டும் பணம் குவியவில்லை. தொட்டதெல்லாம் பொன் என்பார்களே அப்படி கை வைத்த இடமெல்லாம் ரொனால்டேவுக்கு பணம் கொட்டும். இன்ஸ்டாகிராமில் ரொனால்டோ ஒரு பதிவு வெளியிட்டால் கூட அதற்கு 12 கோடி வருவாய் கிடைக்கும். ஆண்டுக்கு 750 கோடி ரூபாய் சம்பாதிக்கும் ரொனால்டோ ஏழ்மையான பின்னணியை கொண்டவர் என்பது பலருக்கு தெரியாது.
உலகின் முன்னணி கால்பந்து அணிகள் என்று எடுத்துக் கொண்டால் மான்செஸ்டர் யுனைடெட் , ரியல்மாட்ரிட் ,யுவென்டஸ் அணிகள் முக்கியமானவை. இந்த மூன்று அணிகளுக்காகவும் விளையாடியுள்ள ரொனால்டோ, போர்ச்சுகல் நாட்டில் மெடிரா Madeira, தீவிலுள்ள São Pedro என்ற நகரத்தில் ஜோஸ் டினிஸ் ஏவியாரோ என்ற சமையல்காரருக்கும் மரியா என்ற பூங்கா பராமரிப்பாளருக்கும் 4- வது குழந்தையாக பிறந்தவர்.
ரொனால்டோ வயிற்றில் இருக்கும் போது, வறுமை காரணமாக குழந்தையை வளர்க்க முடியாது என்று கருதிய தாயார் மரியா கருவை கலைத்து விட கருதியுள்ளார். மருத்துவமனை படி வரை ஏறியும் விட்டார். ஆனால், டாக்டர்கள் கருவை கலைக்க முடியாது என்று ‘கை விரித்து விட்டனர். பின்னர் , தனக்கு தெரிந்த கை வைத்தியம் அதாவது அதிக குளிரான பீர் குடிப்பது அப்படி இப்படி என்று எதுவெல்லாமோ செய்து பார்த்திருக்கிறார். அப்போதும், கருவிலிருந்த ரொனால்டோ கலையவில்லை, பிறந்தே விட்டான்.
ரொனால்டோ பிறப்புக்கு பிறகு குடும்பத்தில் இன்றும் வறுமை தாண்டவமாடியது. ரொனால்டோவுக்கு 11 வயது இருக்கும் போது, தந்தை José Dinis Aveiro கல்லீரல் நோயால் இறந்து போனார். அதிகமான குடி பழக்கம் காரணமாக 53 வயதிலேயே தந்தை ஜோஸ் இறந்து போனது சிறுவனான இருந்த ரொனால்டோவை வெகுவாக பாதித்தது. இருப்பினும் தாயார் மரியா தன் குழந்தைகளை கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கினார். 'தன் தாயார் எங்களை வளர்ப்பதற்காக வாரத்தில் 7 நாள்களும் வேலை பார்ப்பார் . பல நாள்களில் எங்களுக்காக அவர் பட்டினியுடன் இருந்திருக்கிறார் என்று ரொனோல்டோ தன் தாயார் பற்றி மனம் திறந்து கூறியிருக்கிறார்.
ரொனோல்டோவுக்கு , Elma மற்றும் Lilianna Catia என்ற இரு சகோதரிகளும் Hugo என்ற சகோதரரும் உண்டு. ஆனால், ரொனால்டோவுடன்தான் தாயார் மரியா வசித்து வருகிறார். ரொனால்டோவின் நான்கு குழந்தைகளையும் அவரின் தாயார்தான் வளர்த்து வந்தார். தன் மகன் விளையாடும் செமி ஃபைனல், ஃபைனல் போன்ற இறுதி ஆட்டங்களை பார்த்தால் மரியா அதிகளவில் உணர்ச்சிவசப்பட்டு விடுவார். இதனால், தான் விளையாடும் முக்கியமான ஆட்டங்களை காண தாயாருக்கு ரொனால்டோ தடை விதித்திருந்தார். தொலைக்காட்சியிலையோ அல்லது ஸ்டேடியத்துக்கோ போட்டியை காண வரக் கூடாது என்று ரொனால்டோ தடை போட்டிருந்தார். எனினும், கடந்த மார்ச் மாதத்தில் ரொனால்டோவின் தாயாருக்கு ஸ்ட்ரோக் தாக்கியது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் உயிர் பிழைத்துக் கொண்டார். கடந்த மே மாதத்தில் அன்னையர் தினத்தை முன்னிட்டு தன் தாயாருக்கு விலை உயர்ந்த பென்ஸ் காரை பரிசளித்து அசத்தினார் ரொனால்டோ.
Comments