ஒரு நாள் தியானம்.. இளையராஜா ஆப்சென்ட்
சென்னை சாலிகிராமம் பிரசாத் ஸ்டுடியோவில், இளையராஜா 40 ஆண்டுகாலம் இசைக்கூடமாக பயன்படுத்திய அறை தகர்க்கப்பட்டு விட்டதாகவும், இதனால் மனம் உடைந்த இளையராஜா நீதிமன்றம் அனுமதித்திருந்தும் அங்கு வரவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டது.
தமிழ் திரையுலகில் கொடிகட்டிப் பறந்த காலம் தொட்டு, சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பிரசாத் ஸ்டுடியோவை பயன்படுத்தி வந்த இளையராஜா அதற்காக வாடகை கொடுத்தது கிடையாது என்று கூறப்படுகின்றது.
ஆனால் இளையராஜா இசை அமைக்கும் படத்தின் தயாரிப்பாளர்களிடம், கட்டணம் வசூலித்து பிரசாத் ஸ்டூடியோ வருமானம் ஈட்டி வந்ததாக சொல்லப்படுகிறது.
ஸ்டுடியோ நிர்வாகம் உரிமையாளர் ரமேஷ் பிரசாத்திடமிருந்து மகன் சாய் பிரசாத் கைக்கு வந்த பிறகு, இளையராஜா பயன்படுத்தி வந்த இசைக் கூடம் உள்ளிட்ட ஒரு தளம் முழுவதையும் மென்பொருள் நிறுவனம் ஒன்றிற்கு வாடகைக்கு விட முடிவு செய்துள்ளார்.
நகரின் பிரதானமான பகுதியில் பெரும் வாடகை ஈட்டித் தரக்கூடிய அந்த இடத்திற்கு, இளையராஜாவிடம் இருந்து உரிய வாடகையை பெற முடியவில்லை என்ற நிலையிலேயே சாய் பிரசாத் அவ்வாறு முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கு எதிராக இளையராஜா நீதிமன்றம் சென்ற நிலையில், தங்கள் நிறுவன இடத்தை இளையராஜா அபகரிக்க முயற்சிக்கிறார் என்ற அடிப்படையில் பிரசாத் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
மேலும் தங்களது இடம் என்ற வகையில், இளையராஜா பயன்படுத்திய அறையில் இருந்த பொருட்களை எடுத்து வேறு ஒரு இடத்தில் குவித்து வைத்ததோடு, அந்த அறையின் ஒரு பகுதியையும் இடித்துள்ளனர்.
இந்நிலையில், உயர்நீதிமன்றத்திற்கு வழக்கு சென்று, சமரச அடிப்படையில் இளையராஜா இன்று ஒரு நாள் மட்டும் தனது இசைக்கூடத்திற்கு சென்று தியானம் செய்யவும், பொருட்களை எடுத்துக் கொள்ளவும் உயர்நீதிமன்றம் அனுமதித்தது. இளையராஜா இன்று பிரசாத் ஸ்டூடியோ வர உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அவர் மன அழுத்தத்தில் இருப்பதால் வரவில்லை என தெரிவிக்கப்பட்டது.
Comments