கிறிஸ்துமஸ் குடிலில் குழந்தை; தங்களிடம் இருந்து பறிக்கப்பட்டதால் கன்னியாஸ்திரிகள் சோகம்!
அரியலூர் அருகே கிறிஸ்துமஸ் குடிலில் கிடந்த பெண் குழந்தை கன்னியாஸ்திரிகளிடத்தில் இருந்து மீட்டு அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்டது.
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் ஏலாக்குறிச்சியில் கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது.இந்த தேவாலயத்தில் இருந்து சிறிது தூரத்தில் அன்னை காப்பகம் என்ற பெயரில் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தை கன்னியாஸ்திரிகள் பராமரித்து வருகின்றனர். காப்பகத்தில் உள்ள 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கன்னியாஸ்திரிகளின் பராமரிப்பில் உள்ளனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி காப்பகத்தின் வளாகத்தில் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், நேற்று கிறிஸ்துமஸ் குடிலில் இயேசு கிறிஸ்துவின் குழந்தை பொம்மைக்கருகே உயிரோடு பெண் குழந்தையும் ஒன்று இருந்தது. கிறிஸ்துமஸ் குடிலில் உயிரோடிருந்த குழந்தையை கண்டு கன்னியாஸ்திரிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக, குழந்தையை மீட்டு புட்டி பால் கொடுத்து பசியாற்றினர்.
பின்னர், குழந்தையை குளிப்பாட்டி புத்தாடை அணிவித்து மகிழ்ச்சியுடன் குழந்தை வருகையை கொண்டாடி மகிழ்ந்தனர். கிறிஸ்துமஸ் குடிலில் கிடைத்த குழந்தை என்பதால், கன்னியாஸ்திரிகள் அளவற்ற மகிழ்ச்சியும் அடைந்திருந்தனர். தெய்வமே தங்களுக்கு இந்த குழந்தையை பரிசாக தந்திருப்பதாக கருதி சந்தோஷத்தில் திளைத்தனர். ஆனால், கன்னியாஸ்திரிகளின் மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை.
குடிலில் கிடந்த குழந்தை குறித்து தகவல் அறிந்த திருமானூர் போலீசார் காப்பகத்துக்கு வந்து குழந்தையை மீட்டு அரியலூரிலுள்ள தமிழ்நாடு அரசு தொட்டில் குழந்தைகள் காப்பக மையத்துக்கு அனுப்பி வைத்தனர். கிறிஸ்துமஸ் குடிலில் கிடைத்த குழந்தை தங்களிடத்தில் பறிக்கப்பட்டதால், கன்னியாஸ்திரிகள் சோகத்தில் உள்ளனர்.
Comments