தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் டு விஜய டி.ராஜேந்தர் வரை ... மயிலாடுதுறையின் பிரமிக்க வைக்கும் சிறப்புகள்!

0 8313

தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே.டி.தியாகராஜ பாகவதர் முதல் விஜய டி.ராஜேந்தர் வரை பிறந்த மண்ணான மயிலாடுதுறை தனி மாவட்டமாக உருவாகியுள்ளது.

சுமார் ஒரு லட்சம் மக்கள் தொகை கொண்ட மயிலாடுதுறை நகரை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது மயிலாடுதுறை மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வந்தது. மயிலாடுதுறை மக்களின் ஆசையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றி வைத்துள்ளார். நாகை மாவட்டத்திலிருந்து மயிலாடுதுறை பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக உதயமாகியுள்ளது. இந்தியா சுதந்திரமடைந்ததிலிருந்து தஞ்சை மாவட்டத்துடன் மயிலாடுதுறை இருந்தது. கடந்த 1991 ம் ஆண்டில் நாகை மாவட்டத்தில் இணைந்தது. தற்போது, மயிலாடுதுறை தனிமாவட்டமாகியுள்ளது. மயில்கள் ஆடும் நகரம் என்பதாலும் மயில்கள் நிறைந்து காணப்படுவதாலும் மயிலாடுதுறை என்று பெயரை இந்த நகரம் பெற்றுள்ளது.

தமிழகத்துக்கு புகழ் சேர்த்த ஏராளமானோர் இந்த மண்ணைச் சேர்ந்தவர்கள். தமிழ் சினிமாவின் முதல் சூப்பர்ஸ்டார் தியாகராஜ பாகவதர், குன்றக்குடி அடிகளார், பொன்னியின் செல்வன் தந்த கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த்... அவ்வளவு ஏன் திரையுலகை இப்போது வரை கலக்கிக் கொண்டிருக்கும் விஜய. டி. ராஜேந்தர் வரை பல பிரபலங்கள், செலிபிரட்டிகள் மயிலாடுதுறை மண்ணைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. முன்னாள் மத்திய அமைச்சர் மணி சங்கர் ஐய்யர் மயிலாடுதுறை தொகுதியிலிருந்து 3 முறை எம்.பியாக தேர்வு செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதிதாக உருவான இந்த மாவட்டத்தில் மயிலாடுதுறை , சீர்காழி , குத்தாலம்
தரங்கம்பாடி வட்டங்களும் மயிலாடுதுறை , சீர்காழி ஆகிய நகராட்சிகளும் குத்தாலம், தரங்கம்பாடி, மணல்மேடு, வைத்தீசுவரன்கோவில் ஆகிய பேரூராட்சிகளும் அமைந்துள்ளது.

தமிழகத்தின் டெல்டா நகரங்களுக்கு முக்கிய ஜங்ஷன் இந்த மயிலாடுதுறைதான். திருவாரூர், கும்பகோணம், சிதம்பரம், மன்னார்குடி, நாகப்பட்டினர் நகரங்களுக்கு இங்கிருந்து ஒன்றரை மணி நேரத்தில் சென்று விட முடியும். பெரிய அளவில் தொழில்வளம் இல்லையென்றாலும் மயிலாடுதுறை நகரம் எல்லாவிதமான வசதிகளையும் கொண்டுள்ளது. விவசாயம்தான் இந்த மாவட்டத்தில் உயிர்நாடி. மயூரநாதர் கோயில், வைத்தீஸ்வரன் கோயில், பரிமளா ரங்காதன் கோயில், சியோன் ஆலயம், பெரிய பள்ளிவாசல் போன்ற போன்ற புகழ்பெற்ற வழிபாட்டுத் தளங்கள் இந்த மாவட்டத்தில்தான் அமைந்துள்ளன.

இங்குள்ள கோயில்கள் சோழர் கட்டடக்கலையை சார்ந்தவை. 9 நவகிரக கோயில்களில் 6 கோயில்களும் மயிலாடுதுறையை சுற்றி அமைந்துள்ளன. தரங்கம்பாடி கோட்டை இந்த மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற சுற்றுலாத்தளமாகும். சோழர்களின் துறைமுக நகரமும் தமிழகத்தின் பண்டைய கால வணிக நகரருமான பூம்புகாரும் தற்போது மயிலாடுதுறை மாவட்டத்தில்தான் அமைந்துள்ளது..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments