மாட்டுக் கொட்டகை தான் படிப்பறை... நீதிபதியாகத் தேர்வாகியுள்ளார் பால்காரர் மகள்!

0 8132

தேர்வுக்கு புத்தகங்கள் வாங்க முடியாத நிலையிலும் கூட பொது நூலகத்தில் படித்து, மாட்டுத் தொழுவத்தில் பயிற்சி செய்த பால்காரனின் மகள், ராஜஸ்தானில் நடைபெற்ற நீதித்துறை சேவை தேர்வில் தனது முதல் முயற்சியிலேயே நீதிபதியாகத் தேர்வாகி அசத்தியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் உதய்பூர் நகரைச் சேர்ந்தவர் பால் கியாலி லால் ஷர்மா. இவர் அதே ஊரில் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளனர். அவர்களில் இரண்டாவது மகள்தான் சோனல் சர்மா. இவர் சட்டப்படிப்பில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்பில் 3 தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளார்.

இந்த நிலையில், கடந்த 2018 ம் ஆண்டு ராஜஸ்தான் நீதித்துறை சேவை தேர்வை எழுதியிருந்தார் சோனல் சர்மா. இந்த தேர்வின் முடிவுகள் 2019 ஆண்டு அறிவிக்கப்பட்டன. அப்போது தேர்வில் 1 மதிப்பெண் குறைவாக எடுத்ததன் காரணமாக சோனல் சர்மா காத்திருப்போர் பட்டியலுக்கு தள்ளப்பட்டார்.

கடினமாக உழைத்து பயிற்சி பெற்றும் நூலிழையில் தனது வெற்றி வாய்ப்பை இழந்திருந்தார் சோனல். இதனால், அவர் அவ்வபோது தனது தந்தைக்கு உதவியாக வீட்டு வேலை செய்து வந்துள்ளார். தினமும் அதிகாலை நான்கு மணிக்குக் கண் விழித்து கால்நடைகளுக்கு உணவு கொடுப்பது, மாட்டுக் கொட்டகையை சுத்தம் செய்வது, சாணம் அள்ளுவது என்று தனது தந்தைக்கு உதவியாக இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், நீதித் துறை தேர்வில் வெற்றி பெற்றவர்கள் ஒரு வருட மேற்பயிற்சிக்கு சேர வேண்டும். ஆனால், 2018 ம் ஆண்டு தேர்வில் வெற்றி பெற்றவர்களில் 7 பேர் பயிற்சியில் சேராமல் இருந்துள்ளனர். இந்த செய்தி சோனலுக்குத் தெரிய வந்துள்ளது. இதனால், கடந்த செப்டம்பர் மாதம் இது குறித்து ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார் சோனல். இந்த நிலையில், கடந்த புதன்கிழமை ராஜஸ்தான் அரசு காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்கியுள்ளது. இதனால், தற்போது சோனலுக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. சோனல் தற்போது நீதிபதியாகத் தேர்வாகியுள்ளார்.

இது குறித்து, “எனக்கு சிறந்த கல்வியை வழங்க என் பெற்றோர் கடுமையாக உழைத்துள்ளனர். இப்போது என்னால் அவர்களுக்கு ஒரு வசதியான வாழ்க்கையை வழங்க முடியும்” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் சோனல் சர்மா.

தேர்வுக்கு புத்தகங்கள் வாங்க முடியாத நிலையிலும் கூட பொது நூலகத்தில் படித்து, மாட்டு தொழுவத்தில் பயிற்சி செய்து தற்போது நீதிபதிக்கு தேர்வாகியுள்ள சோனல் சர்மாவிற்கு பாரட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments