தந்தை மறைவுக்கு கூட வரவில்லை ; ஆனால், அவர் கண்ட கனவை நிறைவேற்றினார் முகமது சிராஜ்!

0 11829

ஆஸ்திரேலியாவில் இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் மோசமான தோல்வி கண்டது. இந்த ஆட்டத்துடன் கேப்டன் விராட் கோலி தாய்நாடு திரும்பி விட்டார். இந்த ஆட்டத்தில் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக, இந்திய பந்துவீச்சாளர் முகமது ஷமி ஓய்வு எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். மற்றோரு வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மாவும் காயம் அணியில் இல்லாத நிலையில் இளம் வீரர் முகமது சிராஜ்க்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஹைதரபாத்தை சேர்ந்த சிராஜ், ஆஸ்திரேலியா சென்றடைந்த அடுத்த நாளே ஒரு அதிர்ச்சித் தகவல் கிடைத்தது. அதாவது, ஹைதரபாத்தில் இருந்த அவரின் தந்தை முகமது கவுஸ் உடல் நலக்குறைவு காரணமாக இறந்து விட்டார் என்ற தகவலே அது. சாதாரண ஆட்டோ ஓட்டுநரான முகமது கவுஸ் , தன் மகனின் கிரிக்கெட் வாழ்வுக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவர். காலையில் ஒரு வேலை மாலையில் ஒரு வேலை இரவில் இன்னோரு வேலை பார்த்து முகமது சிராஜின் கிரிக்கெட் பயிற்சிக்காக பணம் சம்பாதித்தவர். தன் மகனிடத்தில் 'என்றாவது ஒருநாள் தேசத்தை நீ பெருமைப்படுத்துவாய்' என்று சொல்லி சொல்லி வளர்த்தவர். அந்த நாளுக்காகவே முகமது சிராஜ் காத்திருந்தார்.

ஆனால், ஆஸ்திரேலியாவில் இந்திய அணிக்காக தன் மகன் டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் முன்னரே கடந்த நவம்பர் 21 ஆம் தேதி  முகமது கவுஸ் இறந்து போனார். தந்தையின் மறைவு முகமது சிராஜை வெகுவாகவே பாதித்தது. உடனடியாக, தன் தாயிடத்தில் பேசினார். அவரோ, 'நீ கிரிக்கெட்டில் மட்டும்தான் கவனம் செலுத்த வேண்டும். தந்தையின் உடலை கூட பார்க்க வர வேண்டாம்' என்று மனதை கல்லாக்கிக் கொண்டு மகனுக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் இருந்த முகமது சிராஜ் பாக்சிங் டே டெஸ்ட்டில் களமிறங்கினார். முதல் நாள் ஆட்டத்தில் லஞ்ச் பிரேக் வரை சிராஜ்க்கு பந்து வீச வாய்ப்பளிக்கப்படவில்லை . மதியத்துக்கு பிறகு, கேப்டன் அகிங்ய ரகானே, முகமது சிராஜ்க்கு பந்து வீச வாய்ப்பளித்தார். தன் முதல் டெஸ்ட் ஆட்டத்தின் முதல் நாளே முகமது சிராஜ் சிறப்பாக பந்து வீசினார். 15 ஓவர்களை வீசிய சிராஜ் 4 மெய்டன் ஓவர்களை வீசி 40 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். அதோடு, 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார் சிராஜ். ஆஸ்திரேலிய வீரர் மார்க்கஸ் லாபுசானை (Marnus Labuschagne) முகமது சிராஜால் வீழ்த்ததப்பட்ட முதல் டெஸ்ட் விக்கெட் ஆகும்.

தன் தந்தையின் இறுதிச்சடங்கில் கூட கலந்து கொள்ள முடியாத நிலையில், தேசத்துக்காக ஆடி தன் தந்தைக்கு இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார் முகமது சிராஜ்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments