2021 ஆம் ஆண்டு எப்படியிருக்கும் ? - கண் தெரியாத பெண் பாபா வங்கா கணிப்பு வைரலாகிறது
2021 ஆம் ஆண்டு பற்றியும், வருங்காலம் பற்றியும் பாபா வங்கா என்ற மர்ம பெண் கூறிய கருத்துக்கள் தற்போது வைரலாகி வருகிறது.
கொரோனா எனும் கொடிய வைரஸ் சீனாவில் பிறந்து உலகில் உள்ள மூளை முடுக்கெங்கிலும் பரவிவிட்டது. எஸ்.பி. பாலசுப்ரமணியம் போன்ற இந்த வருடத்தின் தொடக்கத்தில் நம்மோடு இருந்தவர்கள், ஆண்டின் இறுதியில் நம்மோடு இல்லை. பல உயிரிழப்புகள், சோகங்கள், புயல் மழைகளை தாண்டி 2020ஆம் ஆண்டின் இறுதி தருவாயில் உள்ளோம். வரப்போகும், 2021 ஆம் ஆண்டாவது சிறப்பாக அமைய வேண்டும் என்பது ஒட்டுமொத்த மனித இனத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்தநிலையில், 2021 ஆம் ஆண்டு பற்றியும், வரும்காலங்கள் பற்றியும் மர்ம பெண் கூறிய கருத்துக்கள், தற்போது வைரலாகி வருகிறது. பல்கேரியா நாட்டைச் சேர்ந்தவர் பாபா வங்கா என்ற பெண்மணி. இவர் கடந்த 1996 ஆம் ஆண்டு தனது 85ஆவது வயதில் உயிரிழந்தார். 12 வயது வரை மிகவும் ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தார் பாபா வங்கா. ஆனால் அதன் பிறகு நோய்வயப்பட்டு, தனது பார்வையை முற்றிலுமாக இழந்தார். பார்வையை இழந்தவுடன் , வருங்காலம் குறித்து அறிந்து கொள்ள கடவுள் தனக்கு புது வித சக்தியை கொடுத்திருப்பதாக தெரிவித்தார். அந்த வகையில், இவர் இறப்பதற்கு முன்னரே வருங்காலம் குறித்து பல கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதில் பல சம்பவங்கள் உண்மையாக நிகழ்ந்துள்ளது.
உதாரணமாக, அமெரிக்காவில் அமைந்துள்ள இரட்டை கோபுரங்கள் மீது விமான தாக்குதல் நடைபெறும் என கூறியிருந்தார். அதன்படி 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அந்த சம்பவம், நடைப்பெற்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதேப்போல அமெரிக்காவின் 44 - வது ஜனாதிபதியாக கருப்பினத்தவர் ஒருவர் பதவியேற்பார் என தெரிவித்திருந்தார். அதன்படி பாராக் ஒபாமா தான் அமெரிக்காவின் 44ஆவது ஜனாதிபதியாக பதவியேற்றார். இப்படி பாபா வங்கா ஏற்கனவே கணித்துள்ளவைகளில், ஏறக்குறைய 85 சதவீத விஷயங்கள் உண்மையில் நிகழ்ந்துள்ளன.
இன்னும் சில தினங்களில், 2021 ஆம் ஆண்டு பிறக்கவுள்ள நிலையில், அடுத்த ஆண்டு குறித்தும், இனி வரும் காலங்களில் உலகம் எப்படியிருக்கும் என்பது குறித்தும் பாபா வங்கா சில விஷயங்களை கூறியுள்ளார்.
2021 ஆம் ஆண்டில் இந்த உலகம் சில பேரழிவுகளை சந்திக்கும் என்றும் அமெரிக்கவின் 45- ஆவது அதிபர் ( டொனால்ட் டிரம்ப் )மர்ம நோயால் பாதிக்கப்படுவார் என்றும் கூறியுள்ளார். அடுத்த 200 ஆண்டுகளுக்குள் மனிதர்கள் ஏலியன்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். அதாவது வங்காவின் கணிப்பின் படி இன்னும் 200 ஆண்டுகளில் மனிதன் வாழ தகுந்த இடமாக பூமி இருக்காது என்கிறார்.
ஒரு வலிமையான டிராகன் ஒட்டுமொத்த மனித குலத்தையே கைப்பற்றும் என்றும், அதில் மூன்று ராட்சதர்கள் ஒன்று கூடுவர் என்றும், கணித்து கூறியுள்ளார். டிராகன் என பாபா வங்கா குறிப்பிட்டது சீனாவாக இருக்கலாம் என்று நம்பப்டுகிறது.
பாபா வங்காவின் கூற்றுக்களுக்கு, காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
Comments