40 டன் எடையில் 21 அடி உயர காளிதேவி சிலை... 5 கிரேன்கள் உதவியுடன் ஆந்திரா புறப்பட்டது!

0 5917

சென்னை அருகே 40 டன் எடை கொண்ட காளி சிலை 5 கிரேன்கள் உதவியுடன் லாரியில் ஏற்றி ஆந்திரா அனுப்பி வைக்கப்பட்டது.

தேவகோட்டையை சேர்ந்த ஸ்தபதி முத்தையா சபாபதி செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த பழைய மாமல்லபுரம் சாலை கேளம்பாக்கம் அருகே கடந்த 35 ஆண்டுகளாக ஸ்வர்ணம் சிற்பக்கலைக் கூடத்தை நடத்தி வருகிறார். இங்கு, நூற்றுக்கும் மேற்பட்டோர் இளைஞர்களும், சிற்ப கலைஞர்களும் பணியாற்றி வருகின்றனர். இங்கு, அம்மன் சிலை, விநாயகர் சிலை, சிவன் சிலை என பல்வேறு சாமி சிலைகளை சாஸ்திரப்படி செதுக்கி வருகிறார்கள்.

இந்த கலைக்கூடத்தில் மிக பிரம்மாண்டமான 40 டன் எடையும், 21 அடி உயரம் கொண்ட ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 கைகள் கொண்ட காளி சிலை செதுக்கப்பட்டு வந்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திரா மாநிலம், பிரகாசம் மாவட்டம் திரிபுரந்தாக்கம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ.ராமகிருஷ்ணா கபாலிக் தப்போ சித்தா ஆசிரமத்தில் வைப்பதற்காக காளிதேவி சிலை செய்ய ஆர்டர் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து, 40 டன் எடை கொண்ட காளி தேவி சிலையை தயாரிக்க கல் தேடும் பணி நடைபெற்றது. கல் கிடைத்ததும் சிலை செதுக்கும் பணிகள் தீவிரமான நடைபெற தொடங்கின..தினமும் 10க்கும் மேற்பட்ட சிற்பக்கலைஞர்கள் இந்த பிரமாண்ட சிலையை செதுக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே கொரோனா காரணமாக பணிகள் தடைபட்டது. அரசு தளர்வு அளித்ததை தொடர்ந்து பணிகள் மீண்டும் தொடங்கி முற்றிலும் முடிவடைந்தது. தற்போது, 21 அடி உயரத்தில் 18 கைகளுடன் பிரமாண்டமாக காளி தேவி சிலை தயாராகிவிட்டது.

இதையடுத்து, காளிதேவி சிலையை கொண்டு செல்வதற்காக கபாலிக் தப்போ சித்தா ஆசிரம நிர்வாகிகள் வருகை தந்தனர். காளி தேவி சிலைக்கு ஆடுகள், கோழிகள், பலியிடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.பிறகு, 5 கிரேன்கள் உதவியுடன் பிரமாண்ட காளிதேவி சிலை தூக்கப்பட்டு டார்ரஸ் லாரியில் ஏற்றி ஆந்திரா அனுப்பி வைக்கப்பட்டது. ஜனவரி 1- ஆம் தேதி இந்த காளி சிலை கபோலிக் தப்போ சித்தா ஆசிரமத்தில் நிர்மாணிக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் ஒன்றரை லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று மடத்தின் நிர்வாகிகள் கூறுகிறார்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments