வடிவேலு டயலாக் பாணியில் சம்பவம் : இன்ஸ்பெக்டரிடமே ஆட்டையை போட்ட டிரைவர்... !
ஒரு காமெடி காட்சியில் இன்ஸ்பெக்டரிடம் பிக்பாக்கெட் அடித்த ஏட்டு கைது... என்று பத்திரிகையில் வெளிவந்த செய்தியை படித்து விட்டு ஆஹா... அருமையான செய்திலா என்று வடிவேலு டயலாக் பேசுவார் தற்போது, அந்த டயலாக் போன்றே நிஜத்திலும் டிரைவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை திருவான்மியூர் காவல் நிலையத்தில் குற்றபிரிவில் இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவர் அன்புகரசன். இவரின் போலீஸ் ஜீப்புக்கு அரசு சார்பில் ஓட்டுநர் நியமிக்கபடாததால், அன்புகரசனே பாலவாக்கத்தை சேர்ந்த மகேஷ் என்பவரை ஓட்டுநராக வைத்திருந்துள்ளார். டிரைவர் மகேசுக்கு மாதம் ரூ 10,000 ரூபாய் சம்பளம் மற்றும் படிகள் வழங்கியுள்ளார். கடந்த 8 மாதங்களாக மகேஷ் இன்ஸ்பெக்டர் அன்புக்கரசனுக்கு ஓட்டுநராக பணி புரிந்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக மகேஷ் பணிக்கு வரவில்லை. இன்ஸ்பெக்டர் பல முறை போனில் தொடர்பு கொண்ட போதும் மகேஷ் போனை எடுக்கவில்லை,
இதற்கிடையே, இன்ஸ்பெக்டர் அன்புகரசன் தனது கூகுள் பே கணக்கை சரி பார்த்தார். அப்போது தன் கணக்கிலிருந்த ரூ. 1,15,000ரூபாய் பணம் குறைந்திருந்தை கண்டு அதிர்ச்சியடைந்தார். காவல் ஆய்வாளர் அன்புகரசனுக்கு கூகுள் பே கணக்கை சரியாக உபயோகிக்க தெரியாததால், தன் குடும்பத்தினரிடத்தில் கொடுத்து வங்கிக் கணக்கை சோதனை செய்து பார்த்துள்ளார். அன்புக்கரசனின் வங்கிக் கணக்கில் இருந்து பல முறை மகேஷின் வங்கி கணக்குக்கு பணம் அனுப்பப் பட்டதை குடும்பத்தினர் கண்டுபிடித்தனர்.
இதனால் , அதிர்ச்சியடைந்தை அன்புக்கரசன், உடனடியாக மகேஷை பிடித்து காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகிறார்.
காவல் ஆய்வாளர் அன்புகரசனுக்கு கூகுள் பே சேவையை பயன்படுத்த தெரியாது என்பதால் , தனது செல்போனை மகேஷிடத்தில் கொடுத்து வாகனத்துக்கு டீசல் போடுவது , சாப்பாடு வாங்க பணம் கொடுப்பது, ரீச்சார்ஜ் செய்வது என பண பரிவர்த்தனை செய்து வந்துள்ளார். அப்படி செல்போனை கொடுக்கும் போது, மகேஷ், அன்புகரசன் வங்கி கணக்கில் இருந்து பல முறை தன் வங்கிக் கணக்கும் 10,000, 20,000 என டிரான்ஸ்பர் செய்துள்ளார். அன்புக்கரசனுக்கு கூகுள் பே சேவையை பயன்படுத்த தெரியாததை சாதகமாக்கிக் கொண்டு இன்ஸ்பெக்டரின் பணத்தையே டிரைவர் மகேஷ் ஆட்டைய போட்டுள்ளார். இந்த விஷயம் வெளியே தெரிந்தால், தனக்கு அசிங்கம் என்று கருதிய இன்ஸ்பெக்டர் அன்புக்கரசன் புகார் கொடுக்காமல் ரகசியமாக மகேஷிடத்தில் விசாரணை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.
Comments