மத்தியப் பல்கலைக் கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கு ஒரே நுழைவுத் தேர்வு - வரும் கல்வியாண்டில் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்
மத்தியப் பல்கலைக்கழகங்களின் பட்டப்படிப்புக்கு பொதுவான நுழைத்தேர்வை வரும் கல்வியாண்டில் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
பிளஸ் டூ மாணவர்களின் கட் ஆப் மார்க் பிரச்சினைக்குத் தீர்வு காண மத்திய அரசு ஏழு பேர் கொண்ட குழுவை அமைத்தது. இக்குழு தனது பரிந்துரைகளை இன்னும் ஒரு மாதத்தில் மத்திய அரசுக்கு அளிக்க உள்ளது.
இக்குழுவின் பரிந்துரைப்படி வரும் கல்வியாண்டில் பொது நுழைவுத் தேர்வு முறை அமலுக்கு வர உள்ளதாக உயர்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொது நுழைவுத் தேர்வுடன் சம்பந்தப்பட்ட பாடம் தொடர்பான தேர்வும் நடத்தப்படும். தற்போது 12ம் வகுப்பு போர்டு தேர்வு எழுதிய மாணவர்களில் 90 சதம் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் கூட டெல்லி பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இடம் பெற முடியாத நிலை உள்ளது.
இதன் பின்னர் 60 சதவீதம் மதிப்பெண் பெற்ற மாணவர் கூட பொது நுழைவுத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார் என்றும் பல்கலைக்கழகங்களின் தேர்வுக்குத் தகுதி பெறுவார் என்றும் அதிகாரிகள் விளக்குகின்றனர்.
Comments