மறக்க முடியுமா டிசம்பர் 26, 2004? இன்று சுனாமி தாக்கிய 16-வது ஆண்டு நினைவு நாள்..!

0 7852
சுனாமி தாக்கியதன் 16ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, தமிழக கடற்கரையோர பகுதியில் இன்று பொதுமக்கள் ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

சுனாமி தாக்கியதன் 16ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, தமிழக கடற்கரையோர பகுதியில் இன்று பொதுமக்கள் ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் தேதி சுனாமி தாக்கியதில், சென்னை,  கடலூர், நாகை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஏராளமானோர் பலியாகினர். அந்த சம்பவத்தின் 16ம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில்  நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி   நடைபெற்றது. இதில்,  பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம், நொச்சிக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், மீனவர்கள்  உள்ளிட்ட பலர்,  சுனாமியில் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்ட காணாமல் போன தங்களது உறவினர்கள் மற்றும் பலியானோரின்  புகைப்படங்களையும், மெழுகு வர்த்தியையும் கைகளில் ஏந்தியபடி கலந்து கொண்டனர். பின்னர் கடலில் பாலை ஊற்றியும், மலர்களை தூவியும் அஞ்சலி தெலுத்தினர்.

கடலூர் :

கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம், தாழங்குடா, சோனாங்குப்பம், சொத்திக்குப்பம், அக்கரைக்கோரி, எம்.ஜி.ஆர். திட்டு, பில்லுமேடு உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களில் சுனாமியில்  610 பேர் பலியாகினர். அவர்களுக்கு கடலூர் கடற்கரையில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.  தமிழ்நாடு மீனவர் பேரவையை சேர்ந்த 100 க்கு மேற்பட்ட மீனவ பெண்கள்  பால் குடம் ஏந்தி வந்து கடலில் பாலை ஊற்றி அஞ்சலி செலுத்தினர். இதேபோல் கடற்கரையோரத்திலும், அங்குள்ள நினைவு சின்னத்தின் முன்பும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.  

நாகை :

சுனாமியில் பலியானோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நாகை மாவட்டம் வேளாங்கன்னி பேராலயத்தில் இன்று  சிறப்பு திருப்பலி  நடைபெற்றது. இதேபோல்   1000த்திற்கும் அதிகமானோர்   அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் உள்ள நினைவு ஸ்தூபியில் மும்மத கூட்டு பிரார்த்தனையும், மவுன ஊர்வலமும் நடைபெற்றது. இதில் சுனாமியில் உறவினர்களை பற்கொடுத்தோர் உள்பட ஏராளமானோர் கைகளில் மெழுகுவர்த்தியை  ஏந்தியபடி கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். 

கன்னியாகுமரி :

கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடி மீனவ கிராமத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் நடைபெற்ற நினைவு திருப்பலியில் திரளானோர் கலந்து கொண்டனர். பின்னர் தேவாலயத்தில் இருந்து கல்லறை தோட்டம் வரை அமைதியாக ஊர்வலம் சென்று அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு, சுனாமியில் பலியானோர் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை மற்றும் நினைவு ஸ்தூபியில் மலர்களை தூவியும் மெழுகுவர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தினர்.

மயிலாடுதுறை :

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மீனவ கிராமத்தில் உள்ள கடற்கரையிலிருந்து ஏராளமானோர் முக்கியவீதிகளின் வழியாக பேரணியாக சென்று சுனாமியில் பலியான 315 பேரின் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள நினைவிடத்தில் மலர்வளையம் வைத்தும், மலர்தூவியும் அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் பூம்புகார் எம்.எல்.ஏ. பவுன்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல் சந்திரபாடி மீனவகிராமத்தில் சுனாமியில் பலியானோரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ஏராளமானோர் மெழுகுவர்த்தி ஏற்றியும், படையலிட்டும் அஞ்சலி செலுத்தினர்.

தூத்துக்குடி :

தூத்துக்குடி திரேஸ்புரம் அண்ணா காலனி பகுதியில் உள்ள யாத்திரை மாதா ஆலயத்தில் சுனாமியில் பலியானோருக்கு அஞ்சலி செலுத்தும் வரையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதையடுத்து அங்குள்ள கடலில் பால் ஊற்றியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சுனாமி நினைவு தினத்தையொட்டி, துக்கத்தை கடைபிடிக்கும் வகையில் மீனவர்கள் யாரும் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

புதுச்சேரி :

புதுச்சேரி கடற்கரை சாலையில் வைக்கப்பட்டிருந்த சுனாமி நினைவு தின பதாகை முன்பு முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் கந்தசாமி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், பல்வேறு மீனவ அமைப்பினர் மலர் வளையம் வைத்தும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments