100 ரூபாய்க்காக போக்குவரத்தை தடுக்கும் போலீஸ்..! புரோக்கர்களுக்காக விதிமீறல்...

0 7670
100 ரூபாய்க்காக போக்குவரத்தை தடுக்கும் போலீஸ்..! புரோக்கர்களுக்காக விதிமீறல்...

சென்னை மணலி எம்.எப்.எல் சந்திப்பு மற்றும் சத்திய மூர்த்தி நகர் பகுதிகளில் துறைமுகத்துக்கு செல்லும் கண்டெய்னர் லாரிகளை சாலையில் மறித்து போட்டு போக்குவரத்து நெரிசலை ஏற்பட்டுத்துவதாக போக்குவரத்து போலீசார் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. 100 ரூபாய்க்காக போக்குவரத்தை தடுக்கும் விதிமீறல் போலீஸ் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

சென்னை பெருநகர காவல்துறையின் எல்லைக்குட்பட்ட மணலி எம்.எப்.எல் மற்றும் சத்திய மூர்த்தி நகர் சாலை வழியாக கடற்கரை சாலைக்கு செல்லும் வாகன ஓட்டிகள் தினம் தினம் இது போன்று கனரக வாகனங்களுக்கு இடையே உயிரை கையில் பிடித்துக் கொண்டு பல மணி நேரம் கத்திருந்தால் தான் இந்த சாலையை கடக்க முடியும்..!

சென்னையில் வாகன ஓட்டிகளுக்கு சங்கடமான சாலை என்ற பெயர் சூட்டப்பட்ட இந்த சாலையில் போக்குவரத்து நெரிசலுக்கு யார் காரணம் ? என்று அந்தவழியாக செல்லும் பொது மக்களிடம் கேட்டால் 100 ரூபாய்க்காக போக்குவரத்து தடுப்பு பிரிவு காவல்துறையினர் செய்யும் சேட்டை என்று குற்றஞ்சாட்டுகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் நாப்பாளையம் முதல் சென்னை துறைமுகம் வரை மொத்தம் 20 கிலோ மீட்டர் இந்த சாலையை கடக்க வெளியூர் கண்டெய்னர் லாரிகளுக்கு 2 நாட்கள் ஆகிறது. காரணம் சாலையில் போக்குவரத்து தடுப்பு போலீசார் செயற்கையாக அமைத்துள்ள நீண்ட வரிசை..!

அதே நேரத்தில் போக்குவரத்து காவல் துறையினரை சிறப்பாக கவனிக்கும் உள்ளூர் கண்டெய்னர் லாரிகள் விதியை மீறி செல்ல அனுமதிப்பதால் நாள் ஒன்றுக்கு 3 முறை துறைமுகத்திற்குள் சென்று வர முடிகின்றது என்றால் இந்த போக்குவரத்து நெரிசலுக்கு போலீசார் தானே பதில் சொல்ல வேண்டும்...?

எம்.எப்.எல் சந்திப்பில் லாரிகளை தடுத்து போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய காவல்துறையினரிடம் இது தொடர்பாக நமது செய்தியாளர் கேட்டதும் திருடனுக்கு தேள் கொட்டியது போல அடுத்த நொடியே அனைத்து லாரிகளும் அங்கிருந்து விடுவிக்கப்பட்டது..!

அடுத்ததாக 3 கிலோ மீட்டரில் மீண்டும் இரண்டு போக்குவரத்து தடுப்பு போலீசார் சேர்த்து கண்டெய்னர் லாரிகளை மடக்கினர். இதனால் அங்கும் போக்குவரத்து நெரிசல், வரிசையில் நிற்காமல் சாமானிய வாகன ஓட்டிகள் வரும் வழியை அடைத்துக் கொண்டு மெல்ல மெல்ல ஏறிவரும் உள்ளூர் கண்டெய்னர் லாரி ஓட்டுனர்கள், புரோக்கர்களின் சிபாரிசில் போலீசுக்கு ஆசி வழங்கிவிட்டு தடையின்றி பயணிக்கின்றனர்.

அங்குள்ள போக்குவரத்து தடுப்பு போலீசார் நமது செய்தியாளரை பார்த்ததும் கடமையுணர்வை காட்ட நினைத்து லாரியை மடக்க, லாரி ஓட்டுனரோ வழக்கம் போல அவரை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை, கேட்டால், எல்லாம் மேலிடம் என்று சொல்கின்றார் சம்பந்தப்பட்ட காவலர்

அடுத்ததாக எர்ணாவூர் செல்லும் சாலை சந்திப்பில் ஒரே ஒரு போக்குவரத்து தடுப்பு போலீஸ், அதுவரை புரோக்கர்கள் சிபாரிசில் லாரிகளை அனுமதித்தவர் செய்தியாளரை கண்டதும், விதியை மீறிச்செல்லும் லாரிகளை கம்பால் அடிப்பதும், கண்ணாடியை உடைப்பதுமாய் அவர் செய்த அட்டகாசம் அவருக்கே சிரிப்பை வரவழைக்கும் காட்சிகள்

திருவொற்றியூர் கடற்கரை சாலை சந்திப்பில் ஒரு வரிசையில் லாரிகள் நிற்க, விதியை மீறி அனுமதிக்கப்பட்ட கண்டெய்னர்களால், மற்ற வாகன ஓட்டிகளுக்கு இடையூறு உண்டானது. அங்கு புரோக்கர்கள் புடை சூழ விதியை மீறிச்செல்ல பேரம் பேசிக் கொண்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் அடுத்த நொடியே மறித்து வைத்த அனைத்து லாரிகளையும் வேக வேகமாக அனுமதித்தார்

கடற்கரை சாலையில் எந்த தடையும் இன்றி அவர்களுக்கான வரிசையில் கண்டெய்னர் லாரிகள் விரைவாக சென்றதை பார்க்கும் போது போக்குவரத்து தடுப்பு போலீசார் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற உள் நோக்கத்தில் செயல்படுகின்றனரோ ? என்ற சந்தேகம் எழுகின்றது.

கொள்ளையர்களை பிடிக்க நகர் முழுக்க தனியார் பங்களிப்புடன் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்ட நிலையில் 24 மணி நேரமும் போக்குவரத்து தடுப்பு போலீசார் பணியில் இருக்கும் இடங்களில் எல்லாம் கண்காணிப்பு கேமராக்கள் அவர்களின் கடமை கண்ணியம் கட்டுப்பாட்டை போலவே தலைகவிழ்ந்து தொங்குகின்றன..!

கடற்கரை சாலையின் பெயரை சொல்லி நாப்பாளையம் முதல் நூற்றுக்கணக்கான கண்டெய்னர் லாரிகளை மறித்துப்போட்டு வளம் கொழிக்கும் போக்குவரத்து தடுப்பு போலீசாரும் அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய உயர் காவல் அதிகாரிகளும் இந்த காட்சிகளை பார்த்த பின்னராவது மக்கள் மீது இறக்கப்பட்டு செயற்கை போக்குவரத்து நெரிசலை கைவிடுவார்களா? அல்லது ஏதாவது உப்பு சப்பில்லாத காரணம் சொல்லி சமாளிப்பார்களா ? என்பதே ஒவ்வொரு நாளும் அவதிப்படும் வாகன ஓட்டிகளின் ஆதங்கமாக உள்ளது.

அதே நேரத்தில் போக்குவரத்து நெரிசலை தீர்க்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள போக்குவரத்து காவல் உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments