விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை... பிரதமர் மோடி அறிவிப்பு...
விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகள் குறித்தும் திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயார் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கும் திட்டத்தின் 7-வது தவணை தொகை இன்று வழங்கப்பட்டது.இதற்காக டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று விவசாயிகளுக்கு அடுத்த தவணை தொகையை வழங்கினார்.
நாடு முழுவதும் உள்ள 9 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக 18 ஆயிரம் கோடி ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது என்றார். இதற்கு எந்த இடைத்தரகரும் இல்லை, ஏஜெண்டுகளும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.
ஆனால் மேற்கு வங்க மாநில விவசாயிகளுக்கு மட்டும் இந்த பயன் கிடைக்கவில்லை என்று அவர் , அந்த மாநில அரசு மட்டுமே மத்திய அரசு திட்டங்களின் பலன் மாநில மக்களுக்கு கிடைக்க விடாமல் செய்து வருகிறது என்றார். மம்தா பானர்ஜியின் கொள்கைகள் மேற்கு வங்கத்தை சீரழித்து விட்டதாக குற்றம் சாட்டிய அவர், இதுகுறித்து ஏன் எதிர்க்கட்சிகள் எதுவும் பேசுவதில்லை என்றார்.
இப்போது தங்களின் விளைபொருட்களுக்கு எங்கு நல்ல விலை கிடைக்கும் என்பதை ஒவ்வொரு விவசாயியும் அறிந்து வைத்துள்ளதாக கூறிய பிரதமர்,வேளாண் சட்டங்களின் மூலம் விவசாயிகள் விரும்பும் இடத்தில் விளைபொருட்களை விற்பனை செய்ய முடியும் என்றார். விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்க வழி வகை செய்வதில் என்ன தவறு இருக்கிறது என்று அவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு முன்பு ஆட்சியில் இருந்தவர்கள் விவசாயிகளுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை என்றும், வெற்று வாக்குறுதிகளை அளித்து விட்டு, மறந்து போனார்கள் என்றும் அவர் கூறினார். முந்தைய அரசாங்கங்களின் கொள்கைகளால் ஏழைகள் மேலும் ஏழைகளாக்கப்பட்டனர் என்ற அவர், விவசாயிகளின் நிலையை உயர்த்த பாடுபடுவதில் தவறு என்ன இருக்கிறது என்றார்.
நாட்டின் பல இடங்களில் ஒப்பந்த முறை விவசாயம் நடைமுறையில் உள்ளதை சுட்டிக்காட்டிய மோடி, பால் உற்பத்தியில், ஒப்பந்தமுறை இப்போதும் நடைமுறையில் உள்ள நிலையில், எந்த நிறுவனம் அதில் ஏதேசதிகாரம் செய்கிறது என்று வினா தொடுத்தார்.
விவசாயிகளுக்கு தொண்டாற்ற அரசு கடமைப்பட்டுள்ளது என்ற பிரதமர் மோடி, விவசாயிகளின் அனைத்து பிரச்சனைகள் குறித்தும் அரசு திறந்த மனத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்றார்.
Comments