உழவர் உதவித் தொகை... ஒன்பது கோடி விவசாயிகளுக்கு வழங்க ரூ. 18,000 கோடி விடுவிப்பு

0 3960
உழவர் உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் ஒன்பது கோடி விவசாயிகளுக்குப் தலா 2ஆயிரம் ரூபாய் வீதம் பதினெட்டாயிரம் கோடி ரூபாயைப் பிரதமர் நரேந்திர மோடி விடுவித்துள்ளார்.

உழவர் உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் ஒன்பது கோடி விவசாயிகளுக்குப் தலா 2ஆயிரம் ரூபாய் வீதம் பதினெட்டாயிரம் கோடி ரூபாயைப் பிரதமர் நரேந்திர மோடி விடுவித்துள்ளார். மத்திய அரசின் திட்டப் பயன்கள் விவசாயிகளுக்குச் சென்று சேர மம்தா பானர்ஜி அனுமதிக்கவில்லை எனப் பிரதமர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

உழவர் உதவித் தொகைத் திட்டத்தில் ஆண்டுக்கு ஆறாயிரம் ரூபாய் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படுகிறது.

இந்நிலையில் ஒவ்வொருவருக்கும் இரண்டாயிரம் ரூபாய் என்கிற கணக்கில் 9 கோடிப் பேருக்கு மொத்தம் 18 ஆயிரம் கோடி ரூபாயை அவர்களின் வங்கிக் கணக்குகளுக்குப் பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார். அதன்பின் உழவர் உதவித் தொகை, உழவர் கடன் அட்டை திட்டங்களில் பயன்பெற்றவர்களிடம் காணொலியில் கலந்துரையாடினார்.

உழவர் கடன் அட்டை மூலம் ஆண்டுக்கு 4 விழுக்காடு என்கிற குறைந்த வட்டியில் கடன்பெறுவதை மற்ற விவசாயிகளுக்கு எடுத்துரைக்கும்படி பயனாளிகளைக் கேட்டுக்கொண்டார். இடைத்தரகர் இல்லாமல், தரகு இல்லாமல் நேரடியாக விவசாயிகளுக்கு உதவித் தொகை வழங்கப்படுவதாகத் தெரிவித்தார்.

மத்திய அரசு திட்டங்களை மேற்கு வங்க அரசு அனுமதிக்காததால், அவற்றின் பயன்களை வங்காள விவசாயிகள் அடைய முடியவில்லை எனப் பிரதமர் மோடி தெரிவித்தார்.

மம்தா பானர்ஜியின் கொள்கைகள் வங்காளத்தை அழித்துவிட்டதாகக் குற்றஞ்சாட்டிய அவர், விவசாயிகளுக்கு எதிரான மம்தாவின் நடவடிக்கைகள் தன்னைப் புண்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.

புதிய வேளாண் சட்டங்கள் பற்றியும், குறைந்தபட்ச ஆதரவு விலை முறை கைவிடப்படும் என்றும் விவசாயிகளிடம் எதிர்க்கட்சியினர் தவறான தகவலைப் பரப்புவதாகப் பிரதமர் மோடி குற்றஞ்சாட்டினார். குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என உறுதியளித்தார்.

வேளாண்துறைச் சீர்திருத்தங்களால் விவசாயிகள் விளைபொருட்களை எங்கும் யாருக்கும் விற்க முடியும் என்பதால் நல்ல விலை கிடைக்கும் எனத் தெரிவித்தார். முந்தைய அரசு விவசாயிகளுக்கு அளித்த உறுதிமொழிகளை மறந்துவிட்டதாகவும், முந்தைய அரசின் கொள்கைகளால் ஏழைகள் மேலும் ஏழைகளானதாகவும் மோடி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments