மங்காத்தா போலீஸ் மாட்டிக் கொண்டது இப்படித்தான்..!
முகநூல் நட்பால் இணைந்து, அஜீத்தின் மங்காத்தா படத்தை பார்த்து கொள்ளையடித்து சிக்கிக் கொண்ட போலீஸ் கொள்ளையர்களின் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...
திருவள்ளூரில் நகை கடை நடத்தி வரும் மகேந்திரா என்பவர் கடைகளுக்கு நகைகளை வினியோகம் செய்ய சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் ஆட்டோவை வழி மறித்து கத்தியை காட்டி மிரட்டி 300 பவுன் தங்க நகைகளை பறித்துச்சென்றனர்.
இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக விசாரித்த தனிப்படையினர் சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து 89 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக் காட்சிகளை தொடர்ச்சியாக கண்காணித்தும் எந்தவித முன்னேற்றமும் இல்லை.
இந்த நிலையில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ரஞ்சித் என்பவன் தன்னிடம் இருந்து 40 சவரன் திருட்டு நகைகளை உள்ளூரில் விற்றால் போலீஸ் விசாரணையில் சிக்கி விடுவோம் என்ற அச்சத்தில் தஞ்சாவூர் சென்று அங்குள்ள ஒரு கடையில் விற்க முயன்றுள்ளான்.
ஆனால் ஏற்கனவே கொள்ளை போன நகை குறித்த போட்டோக்களை நகைக்கடை உரிமையாளர்கள் வாட்ஸ் அப் குரூப்பில் மகேந்தரா ஷேர் செய்திருந்ததால், ரஞ்சித் கொடுத்த நகைகளை வாங்கி பார்த்த அந்த கடை உரிமையாளருக்கு சந்தேகம் வந்துள்ளது.
இதற்கேற்ற பணம் இப்பொழுது தன்னிடத்தில் இல்லை நாளை வாருங்கள் பணம் தருகிறேன் என்று கூறி நகைகளை வாங்கி வைத்துக்கொண்டு மகேந்திராவுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
மகேந்திரா இந்த நகை முழுவதும் தன்னுடைய நகை தான் என்று கூறியதால் நகைக்கடை உரிமையாளர் அங்கு உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து ரஞ்சித்தை சிக்க வைத்துள்ளார்.
இவரை சுங்குவார் சத்திரம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்ட போது தமிழரசன், கதிரவன் ஆகிய இரு காவலர்கள் உள்ளிட்ட 10 களவாணிகள் சிக்கினர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் இரு போலீசாரும் அஜீத் ரசிகர் என்று முக நூல் மூலம் நட்பாகியுள்ளனர். மங்காத்தா படம் பார்த்து இந்த கொள்ளை திட்டத்துக்கு ஸ்கெட்ஜ் போட்டதாக வாக்கு மூலம் அளித்துள்ளனர்.
மகேந்திரா கடையில் ஒரு வருடத்திற்கு முன்பு பிள்ளை சத்திரத்தை சேர்ந்த சந்தோஷ் என்பவர் வேலை செய்து வந்துள்ளார்.
இவர் 15 நாட்களுக்கு ஒருமுறை மகேந்தர் எந்த வித பாதுகாப்பும் இல்லாமல் நகைகள் எடுத்து வருவதை அவருடைய நண்பரான போலீஸ்காரர் தமிழரசனிடம் கூறிஉள்ளார்.
திருக்கழுக்குன்றத்தில் காவல் நிலையத்தில் டிரைவராக பணிபுரிந்து வருந்த தமிழ் அரசன், முக நூல் மூலம் அஜீத் ரசிகர் என்று அறிமுகமான நண்பரான மானாமதி காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் கதிரவனிடம் தகவல் தெரிவிக்க, தங்கள் கூட்டாளிகளான பழைய குற்றவாளிகளுடன் சேர்ந்து ஓடும் ஆட்டோவை மறித்து மங்காத்தா படப்பாணியில் இந்த கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றியதாக வாக்கு மூலம் அளித்துள்ளனர்.
குற்றசெயல்களில் ஈடுபட்டு கைதான ராகுல் என்பவனை சிறைக்கு அழைத்துச் செல்லும் காவலர்கள் தமிழரசனும், கதிரவனும் நடிகர் அஜித்தின் பெருமைகளை பேசிக்கொண்டு இருந்துள்ளனர்.
இதனை கவனித்த ராகுல் தானும் அஜித் ரசிகர் தான் என்று பேச்சுக்கொடுத்து கொள்ளை திட்டத்துக்குள் வந்துள்ளான் என்கின்றனர் காவல் துறையினர்.
இந்த கொள்ளை சம்பவத்தில் கைதாகியுள்ள சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்த மாரி காவல் உதவி ஆய்வாளர் எழுத்துத்தேர்வில் தேர்வாகியுள்ளவர் என்பது குறிப்பிப்பிடதக்கது.
கொள்ளை சம்பவத்தின் போது காவலர் தமிழரசன், காவலர் கதிரவன், SI பயிற்சிக்கு தேர்வாகியுள்ள மாரி ஆகியோர் தனியே நின்று கொள்ள, கொள்ளையர்கள் ரஞ்சித் ராஜ், ராகுல் ஆகியோர் மட்டும் சென்று கத்தியை காட்டி மிரட்டி நகைகளை பறித்து வந்ததும் தெரியவந்தது.
மேலும் இந்த கொள்ளை வழக்கில் இன்னும் 5 பேரை தேடிவரும் நிலையில் கதிரவன், தமிழரசன், சந்தோஷ் ,சரவணன், ராகுல், சுமிர் ராஜ் ஆகியோரை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.
சினிமாவை பார்த்து கொள்ளையடித்து சிறையில் கம்பிகளுக்குள் சிக்கி தவித்து வருகின்றனர் இந்த கொள்ளையர்கள்..!
Comments