சிபிஐ கட்டுப்பாட்டில் இருந்த 103 கிலோ தங்கம் மாயம் : திருட்டு வழக்கு பதிவு

0 2264
சென்னையில் சிபிஐ கட்டுப்பாட்டில் இருந்த 30 கோடி ரூபாய் மதிப்புள்ள 103 கிலோ தங்கம் மாயமான விவகாரத்தில் சிபிசிஐடி திருட்டு வழக்கு பதிவு செய்துள்ளது.

சென்னையில் சிபிஐ கட்டுப்பாட்டில் இருந்த 30 கோடி ரூபாய் மதிப்புள்ள 103 கிலோ தங்கம் மாயமான விவகாரத்தில் சிபிசிஐடி திருட்டு வழக்கு பதிவு செய்துள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு சட்ட விரோதமாகத் தங்கம் இறக்குமதி செய்த புகாரில், சென்னை என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள சுரானா நிறுவனத்தில் 400 கிலோ தங்கத்தை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்து, சுரானா நிறுவனத்தில் உள்ள லாக்கர்களில் சீல் வைத்தனர்.

இந்நிலையில், சுரானா நிறுவனம் வங்கிகளிடம் பெற்ற கடனை அடைக்க ஏதுவாக, பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தைச் சிறப்பு அதிகாரியிடம் வழங்க சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்காக சுரானா நிறுவனத்தின் லாக்கர்களில் இருந்த தங்கத்தை எடை பார்த்தபோது 296.606 கிலோ தங்கம் மட்டுமே இருந்தது. 103.864 கிலோ தங்கத்தைக் காணவில்லை.

இதையடுத்து, 103.864 கிலோ தங்கத்தை ஒப்படைக்கக் கோரி சிறப்பு அதிகாரியான ராமசுப்பிரமணியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ், பல கோடி ரூபாய் மதிப்புள்ள 103 கிலோ கிராம் தங்கம் மாயமாகி இருப்பது என்பது சிபிஐ மீது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறியிருந்தார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, எஸ்.பி. அந்தஸ்துக்குக் குறையாத அதிகாரியைக் கொண்டு விசாரித்து ஆறு மாதங்களில் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என சிபிசிஐடிக்கு உத்தரவிட்டார். இந்த நிலையில், சிபிஐ 30 பக்க புகார் மனுவை தமிழக டிஜிபி மூலம் சிபிசிஐடியிடம் கொடுத்துள்ளது.

அதன் அடிப்படையில் திருட்டு வழக்கிற்கான சட்டப்பிரிவு 380-ன் கீழ் முதல் தகவலறிக்கையை பதிந்துள்ள சிபிசிஐடி, விசாரணையை தொடங்கியுள்ளது. சிபிசிஐடி எஸ்பி விஜயகுமார் விசாரணையை தொடங்கியுள்ளார்.
 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments