குழந்தைகளின் உயிரைக் குடிக்கும் நிமோனியா!- உள்நாட்டிலேயே முதல் மருந்து தயாரிப்பு

0 6569

நிமோனியா நோய்த் தொற்றுக்கு எதிராக, சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனத்தால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் தடுப்பூசி அடுத்த வாரம் முதல் சந்தைகளில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள இரண்டு வெளிநாட்டு நிறுவனங்களின் தடுப்பூசிகளை விடவும் இந்த தடுப்பூசி மிகவும் மலிவு விலையில் கிடைக்கவுள்ளது.

நிமோனியா மிகக்கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நுரையீரல் தொற்றுநோய் ஆகும். அல்வியோலி என்று அழைக்கக்கூடிய தொற்று நுரையீரல் காற்றுப் பைகளைத் தாக்கி திரவம் அல்லது சீழால் நிரப்பும்போது இந்த பாதிப்பு ஏற்படும். இதனால், ஆக்ஸிஜன் அளவு குறைந்து சுவாசப் பிரச்னை ஏற்படும். இந்த நோயால் குழந்தைகளும் முதியவர்களும் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள்.image

உலகில் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் தொற்று நோய்களில் அபாயகரமானதாகக் கருதப்படுகிறது நிமோனியா. இந்த நோயால் ஐந்து வயதுக்கு உட்பட்ட எட்டு லட்சம் குழந்தைகள் ஒவ்வொரு வருடமும் இறக்கின்றனர். இந்தியாவைப் பொருத்தவரை 2018 - ம் ஆண்டு மட்டும் 1,27,000 குழந்தைகள் நிமோனியாவால் உயிரிழந்துள்ளனர். ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 14 - க்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிரைக் குடிக்கிறது நிமோனியா.

2000 - ம் ஆண்டு ஐந்து வயதுக்கு உட்பட்ட ஆயிரம் குழந்தைகளில் 17 பேருக்கும் அதிகமானோர் நிமோனியாவால் உயிரிழந்தனர். ஆனால், அதற்குப் பிறகு மத்திய மற்றும் மாநில அரசின் நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி காரணமாக நிமோனியாவால் ஏற்படும் உயிரிழப்பு குறைக்கப்பட்டது. தற்போது ஐந்து வயதுக்கு உட்பட்ட ஆயிரம் குழந்தைகளில் 5 பேர் நிமோனியாவால் உயிரிழந்து வருகின்றனர். இந்த விகிதத்தை மேலும் குறைக்க அரசு செயல்பட்டு வருகிறது.

ஃபைசர் (( Pfizer (NYSE: PFE) )) மற்றும் கிளாக்சோஸ்மித்க்லைன் (( GlaxoSmithKline (LSE: GSK) )) நிறுவனங்களின் தடுப்பூசிகள் தான் இதுவரை இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்தியாவிலேயே தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் புனேவைத் தளமாகக்கொண்ட சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் Pneumococcal Polysaccharide Conjugate எனும் தடுப்பூசியைத் தயாரித்தது. புதிய தடுப்பூசி இந்தியா மற்று ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் 1, 2 மற்றும் 3 கட்டங்களாகப் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த மருத்துவப் பரிசோதனைத் தரவுகளை ஆய்வு செய்த இந்திய மருந்து ஒழுங்குமுறை ஆணையம் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்தது. இந்தத் தடுப்பூசி தான் இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள முதல் நிமோனியா தடுப்பூசி என்பது குறிப்பிடத்தக்கது.

image

இந்தத் தடுப்பூசி ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகளை விடவும் மலிவாக இருக்கும் என்று மத்திய அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து சீரம் நிறுவனம், “‘பிரதமரின் ஆத்மனிர்பர் பாரத்தின் அழைப்பை ஏற்று, இந்தியாவின் முதல் உலகத் தரம் வாய்ந்த உள்நாட்டு நிமோகோகல் கான்ஜுகேட் தடுப்பூசியை (பி.சி.வி) உருவாக்கியுள்ளோம். இந்திய உரிமத்தைப் பெற்றதன் மூலம் கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக ஊரடங்கு காலத்தில் மேலும் ஒரு வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளோம்” என்று தெரிவித்துள்ளது.

நிமோனியா ஒரு சுவாச வியாதி என்பதால், நிமோகோகல் கான்ஜுகேட் தடுப்பூசியைக் குழந்தைகளுக்குப் போடுவது தற்போதைய COVID-19 தொற்றுநோய்களின் போது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments