லடாக்கில் படைவிலக்கம் கிடையாது... இந்திய இராணுவம் திட்டவட்டம்.!

0 10211
லடாக் எல்லையின் முன்கள பகுதிகளிலிருந்து படைகளை விலக்கிக் கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை என, இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

லடாக் எல்லையின் முன்கள பகுதிகளிலிருந்து படைகளை விலக்கிக் கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை என, இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான கோரிக்கையை நிராகரித்துள்ள இந்தியா, தனது போக்கை சீனா மாற்றிக் கொள்ளாதவரை, படை விலக்கம் சாத்தியமில்லை என்றும், உறுதிபடக் கூறியுள்ளது.

கிழக்கு லடாக் எல்லையில், இந்தியா - சீனா இடையே, கடந்த எட்டு மாதங்களாக, மோதல் போக்கு நிலவி வருகிறது.

இருநாட்டு இராணுவமும், தலா 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்களை, எல்லையில் குவித்துள்ளன. இராணுவ கமாண்டர்கள் மட்டத்திலான, எட்டு சுற்று பேச்சு நடைபெற்ற நிலையில், இன்னும் சுமுக தீர்வு எட்டப்படவில்லை.

இந்நிலையில், இந்திய இராணுவத் தலைமை தளபதி நரவானே, புதன்கிழமையன்று, லடாக் கட்டுப்பாட்டு எல்லைப் பகுதிக்கு பயணம் மேற்கொண்டு, அங்குள்ள முன்கள நிலவரங்களை ஆய்வு செய்தார்.

லடாக் எல்லையின் முக்கிய இடமான, பாங்காங் (Pangong) ஏரியின், ஒவ்வொரு கரைகளும், அதனை ஒட்டியப் பகுதிகளும், மனித கைகளின் விரல்கள் போன்று, வர்ணிக்கப்படுகின்றன.

அதிலும் குறிப்பாக, பாங்காங் ஏரியின் வடக்கு கரையை தனது ஆளுகைக்குள் கொண்டுவர சீனா தொடர்ந்து படாதாபாடு படுகிறது.

சீனாவின் உள்நோக்கத்தை நன்றாகவே உணர்ந்துள்ள இந்திய ராணுவம், பாங்காங் ஏரிக்கரைப் பகுதியிலிருந்து, அதனை ஒட்டிய முன்கள இடங்களிலிருந்து, படை விலக்கத்தையோ, ரோந்து பணியையோ நிறுத்தவில்லை.

இதனை முன்னிறுத்தியே, இந்தியா தனது சாலை வசதி உள்ளிட்ட உட்கட்டமைப்பை மேம்படுத்தி வருகிறது. இதனால், எரிச்சல் அடைந்துள்ள சீனா, இதனை தடுக்கும் நோக்கில், சமாதானம் என்ற பெயரில், முன்கள படைகளை, பரஸ்பரம் விலக்கலாம் என முடிவை, காமண்டர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையின்போது முன்மொழிந்தது.

ஆனால், இதனை இந்திய ராணுவம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

லே-லடாக் பிராந்தியத்தில், கட்டுப்பாட்டு எல்லைப் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட இந்திய ராணுவ தலைமை தளபதி நரவானே, முன்கள துருப்புகளை பின்வாங்கச் செய்வது என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை உறுதிபடுத்தியிருக்கிறார்.

தற்போதையே நிலைமையே தொடரட்டும் என்று, இராணுவ அதிகாரிகளுடனான உரையாடலின்போது, ராணுவ ஜெனரல் வலியுறுத்தியதாக, தகவல் வெளியாகியுள்ளது.

இதுதவிர, சிரிஜாப் வரம்பிற்கு உட்பட்ட எட்டு மலைச்சிகரப் பகுதிகளிலும், துருப்புக்கள் இல்லாத பகுதியாக மாற்ற சீன இராணுவ தளபதிகளின் முன்மொழிவை இந்தியா திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments