சென்னை : 150 ஆண்டுகள் உயிர் வாழும் ; ரூ. 15 லட்சம் விலை! - ராட்சத ஆமையை திருடியது யார்?
சென்னை அருகேயுள்ள வட நெம்மேலி முதலைப்பண்ணையில் பராமரிக்கப்பட்டு வந்த 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அரிய வகை வெளிநாட்டு ஆமையை யாரோ திருடி சென்று விட்டார்கள்.
Madras Crocodile Bank Trust Centre for Herpetology என்று அழைக்கப்படும் சென்னை முதலைப் பண்ணை மகாபலிபுரம் செல்லும் கிழக்கு கடற்கரைச் சாலையில் வடநெமிலியில் அமைந்துள்ளது. கடந்த 1976 - ஆம் ஆண்டு இந்த பண்ணை தொடங்கப்பட்டது. இங்கு 3000-க்கும் மேற்பட்ட முதலைகள் உள்ளன . உலகளவில் வாழும் 23 வகை முதலைகள் இங்கு பராமரிக்கப்படுகின்றன. அதில் 17 வகையான முதலைகள் வடநெமிலியில் உள்ளன. ஆமைகள், பல்லி இனங்கள், பாம்புகள் ஆகியவையும் இங்கு பராமரிக்கப்படுகின்றன.
இந்த பண்ணையில் முகப்பு வாயில் பகுதியில் கம்பி வேலி அமைக்கப்பட்டு தனியான ஒரு பகுதியில் அல்டாப்ரா என்ற அரிய வகையான 4 வெளிநாட்டு ஆமைகள் பராமரிக்கப்பட்டு வந்தன. இந்த ஆமைகள் இந்தோனேசியா அருகேயுள்ள காலபாக்சஸ் தீவை பூர்வீகமாக கொண்டவை. இந்த ஆமைகள் 1½ மீட்டர் நீளம் வரை வளரும் தன்மை கொண்டவை, இவை 225 கிலோ எடை வரை இருக்கும். சுமார் 152 ஆண்டுகள் வரை உயிர் வாழும் தன்மை உடைய முழுக்க முழுக்க புல், செடிகள், பழங்கள், கீரைகள், போன்ற தாவரங்களையே உணவாக இவை உட்கொள்ளும். இந்த ஆமை ஒன்றின் விலை ரூ. 15 லட்சம் ஆகும். இது போன்ற 4 ஆமைகள் இங்கிருந்தன. இவற்றில் ஒரு பெண் ஆமையை யாரோ திருடி சென்று விட்டனர்.
கம்பி வேலிக்கு கீழ் 4 சுவர்களுக்கு மத்தியில் பராமரிக்கப்பட்டு வந்த இந்த ஆமை தானாக வேறு இடத்திற்கு நகர்ந்து செல்ல வாய்ப்பு இல்லை என்று முதலைப்பண்ணை நிர்வாகிகள் கூறுகிறார்கள். எனவே, இதன் மதிப்பறிந்த யாரோ திட்டமிட்டு ஆமையை திருடி சென்றிருக்க வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. மாமல்லபுரம் போலீசில் முதலைப்பண்ணை நிர்வாகிகள் புகார் செய்தனர். புகாரின் அடிப்படையில் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் முதலைப் பண்ணையில் பணியாற்றும் ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments