முகநூல் வழியாக மோசடி நைஜீரிய இளைஞன் கைது

0 2783
முகநூலில் அறிமுகமான லண்டன் பெண்ணிடம் வணிகத் தொடர்பில் இருந்த சென்னைத் தொழில் அதிபரை ஏமாற்றி, 40 லட்சம் ரூபாயைச் சுருட்டிய நைஜீரிய கும்பலைச் சேர்ந்தவரை சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர் மும்பையில் கைது

முகநூலில் அறிமுகமான லண்டன் பெண்ணிடம் வணிகத் தொடர்பில் இருந்த சென்னைத் தொழில் அதிபரை ஏமாற்றி, 40 லட்சம் ரூபாயைச் சுருட்டிய நைஜீரிய கும்பலைச் சேர்ந்தவரை சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர் மும்பையில் கைது செய்தனர்.

சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த ஜோசப், ராயல் டிரேடிங் என்னும் நிறுவனம் மூலம் மெத்தை, சோபா உள்ளிட்ட பொருட்களை விற்று வருகிறார்.

தொழில் வாய்ப்புகள் குறித்து அவர் முகநூலில் பகிர்ந்து வந்த நிலையில், அதைப் பார்த்து முகநூல் மெசஞ்சரில் லண்டனைச் சேர்ந்த எலிசபெத் என்ற பெண் அறிமுகமாகியுள்ளார்.

முதலில் தொழில் வாய்ப்புகள் குறித்து விசாரித்து ஜோசப்பின் நிதி நிலையைக் கேட்டறிந்துள்ளார். மும்பையில் ஃபோலிக் ஆயில் கிடைப்பதாகவும், 40 லட்சம் ரூபாய்க்கு போலிக் ஆயில் வாங்கி அனுப்பினால், சரி பாதி கமிஷன் தருவதாகவும் எலிசபெத் ஆசைவார்த்தை கூறியுள்ளார்.

பாதிக்குப் பாதி லாபமா? என்று அசந்து போன ஜோசப், லண்டன் பெண் சொன்னபடி மும்பையைச் சேர்ந்த சுனிதா என்ற பெண்ணை முகநூலில் தொடர்பு கொண்டு போலிக் ஆயிலை அனுப்பி வைக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

முதலில் 2 லிட்டர் போலிக் ஆயில் கொரியரில் ஜோசப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதைப் பரிசோதிக்க வெளிநாட்டினர் இருவர் சென்னை விமான நிலையம் வந்து மாதிரி எடுத்துச் சென்றுள்ளனர்.

பின்னர் தொடர்பு கொண்ட எலிசபெத் தரமான போலிக் ஆயில் தான் எனக் கூறி, மொத்தமாக வாங்கி ஏற்றுமதிக்கான வேலையைத் தொடங்கினால் பணத்தை அனுப்பி வைப்பதாகக் கூறியுள்ளார்.

மும்பை சுனிதா சொன்ன வங்கிக் கணக்குக்கு வெவ்வெறு காலக்கட்டத்தில் 40 லட்சம் ரூபாய் செலுத்திய நிலையில் சுனிதா, எலிசபெத் ஆகியோரின் செல்போன்கள் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டன.

இதனால் தன்னிடம் முகநூலில் பேசியது போலியான ஆள் என்பதை அறிந்த ஜோசப் அதிர்ந்து போனார்.

இது குறித்துச் சென்னை சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் புகார் அளித்தார். காவல் தனிப்படையினர் வங்கிக் கணக்கு விவரங்களைக் கொண்டு மும்பைக்குச் சென்றனர்.

விசாரணையில் ஜோசப்பிடம் மும்பையில் இருந்து சுனிதா என்ற பெயரில் சாட்டிங் செய்தது நைஜீரிய இளைஞர் கிறிஸ்டோபர் வில்மர் என்பதும், அவன் இதேபோல் பலரிடம் லட்சக்கணக்கில் பணத்தைச் சுருட்டியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

கிறிஸ்டோபர் வில்மரைக் கைது செய்த போலீசார், அவனை விமானத்தில் சென்னைக்கு அழைத்து வந்தனர். பயனாளர்கள் முகநூலில் தங்கள் விவரங்களைத் தெரிவிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று சுட்டிக்காட்டும் காவல்துறையினர், நேரடியாக ஆன்லைன் மூலம் அவர்களே வாங்காமல், நம்மூலமாக ஏன் பொருட்களை வாங்க வேண்டும் எனச் சிந்தித்தால் மோசடியைத் தவிர்க்கலாம் என்கின்றனர்.

முன்பின் அறிமுகம் இல்லாதவர்களுடன் முகநூலில் வர்த்தகம் செய்வதாகக் கூறி லட்சங்களை அள்ளிக்கொடுத்தால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்தச் சம்பவமே சான்று.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments