புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான 2 கோடி பேரின் கையெழுத்துகளுடன் கூடிய மனுவை குடியரசுத் தலைவரிடம் அளித்தார் ராகுல்காந்தி
புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, 2 கோடி கையெழுத்துகளுடன் கூடிய மனுவை குடியரசுத் தலைவரிடம் ராகுல்காந்தி அளித்தார்.
இதற்காக குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி சென்ற காங்கிரஸ் பேரணியை தடுத்து நிறுத்திய போலீசார் ராகுல்காந்தி உள்ளிட்ட சிலரை மட்டும் அனுமதித்து விட்டு, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரை தடுப்புக் காவலில் வைத்தனர்.
குடியரசுத் தலைவரிடம் மனு அளித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி, புதிய வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை, விவசாயிகள் தங்கள் ஊர்களுக்கு திரும்ப மாட்டார்கள் எனக் கூறினார். இதற்காக மத்திய அரசு உடனே நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்றார்.
பிரியங்கா உள்ளிட்டோர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டது குறிப்பிட்ட ராகுல்காந்தி, இந்தியாவில் ஜனநாயகம் இல்லை என்று குற்றம்சாட்டினார்.
Comments