எல்லாமே 'அன்லிமிடெட் ' அறிவிப்பால் குவிந்த இளசுகள் ! அழகிய வாகமனில் அரங்கேறும் விபரீதம்
கேரளாவில் இந்திய கம்யூனிஸ்ட் பிரமுகருக்கு சொந்தமான விடுதியில் எல்லாமே அன்லிமிடெட் என்ற பெயரில் போதை விருந்து நடந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா அச்சத்தை மறந்து புத்தாண்டு கொண்டாட்டங்களும் களைகட்டி வருகிறது. கேரளாவில் பல இடங்களில் பார்ட்டிகளுக்கு தயார் என ஹோட்டல்கள் அறிவிக்கப்படாத அறிவிப்பை வெளியிட்டுள்ளன. இடுக்கி மாவட்டத்தில் மிக அழகான இடமான வாகமனில் கிலிஃப் இன் என்ற உல்லாச விடுதி ஒன்றில் இரு நாள்களுக்கு முன் மது, போதை பொருட்களுடன் விருந்து நடந்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஷாஜி என்பவருக்கு சொந்தமானது. இவர் ஏலப்பாறை பஞ்சாயத்தின் முன்னாள் தலைவராகவும் இருந்துள்ளார்.
போதை விருந்து குறித்து போலீஸாருக்கு தகவல் கிடைத்ததும், சம்பந்தப்பட்ட உல்லாச விடுதிக்கு அதிரடியாக புகுந்து போலீசார் சோதனை நடத்தினர். விடுதிக்கும் விதவிதமான போதைப் பொருட்களுடன் விருந்து நடந்தது உறுதியானது. இதையடுத்து,உள்ளேயிருந்த 60 பேரையும் போலீஸ் கொத்தாக அள்ளியது. இதில், 26 பேர் இளம் பெண்கள் ஆவார்கள்.
போதை விருந்தை நடத்த எர்ணாகுளத்தைச் சேர்ந்த 9 பேர் ஒருங்கிணைத்துள்ளனர். சமூக ஊடகங்களில் அறிவிப்பு வெளியிட்டு எதற்குமே எல்லை கிடையாது. எவ்வளவு வேண்டுமானாலும் குடிக்கலாம், போதை மருந்து சாப்பிடலாம் எல்லாமே அன்லிமிடெட் என்று குறிப்பிட்டுள்ளனர். அறிவிப்பை பார்த்து இளைஞர் பட்டாளமும் வாகமன் நோக்கி படையெடுத்தது. ஒரு கட்டத்தில் உல்லாச விடுதியில் அதிகளவில் இளைஞர்களும், இளம் பெண்களும் குவிந்துள்ளனர். கஞ்சா, விதவிதமானபோதை மாத்திரைகள் , ஹெராயின் உள்ளிட்ட 7 வகை போதை மருந்துகள் பார்ட்டியில் கரைபுரண்டோடியுள்ளது.
தொடர்ந்து, விடுதியை புக் செய்த 9 பேரும் கைது செய்யப்பட்டனர். பெருமளவு பணம் கொடுத்து இளைஞர்களும், இளம் பெண்களும் இந்த போதை விருந்தில் கலந்து கொண்டது தெரிய வந்தது. தொடுபுழாவைச் சேர்ந்த அஜ்மல் நஷீர் என்பவர்தான் இந்த பார்ட்டிக்கு போதை மருந்துகளை சப்ளை செய்ததும் தெரிய வந்தது. விடுத்தியிலிருந்து பெட்டி பெட்டியாக போதை மருந்துகளும், கார்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. மலையாள நடிகை பிரிஸ்டி பிஸ்வாசும் இந்த வழக்கில் 9 - வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
இதனால், மலையாள நடிகர் - நடிகைகளும் பார்ட்டியில் பங்கேற்றனாரா என்கிற ரீதியிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே, பார்ட்டி நடத்த விடுதி வழங்கிய ஷாஜியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். பிறந்த நாள் பார்ட்டி என்ற பெயரில் தன் விடுதியை போதை கும்பல் புக் செய்ததாகவும் தனக்கு உள்ளே நடந்த விஷயம் குறித்து எதுவும் தெரியாது என்று ஷாஜி விளக்கமளித்தாலும் கட்சித் தலைமை ஏற்கவில்லை.
இதற்கிடையே, புத்தாண்டை முன்னிட்டு வாகமன் தங்கும் விடுதிகளில் போலீஸார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
Comments