பீட்டர்ஸ் காலனி குடியிருப்பு இடிப்பில் அதிகாரிகளுக்கு மீட்டர்..! விண்ணப்ப கட்டணம் சுருட்டல்
சென்னையில், வீட்டு வசதிவாரிய குடியிருப்புகளை இடித்து அகற்ற ஒப்பந்தம் வழங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள பழமையான பீட்டர்ஸ் காலனி வீட்டுவசதி வாரியக் குடியிருப்பை இடித்து விட்டு வணிக வளாகம் கட்டப்பட உள்ளது. இதற்காக, 20 பிளாக்குகளைக் கொண்ட குடியிருப்புக் கட்டடங்களை இடிக்கும் பணிக்கு 3 பிரிவாக ஒப்பந்தம் விடப்பட்டது. தற்போது கட்டங்களை இடிக்கும் பணி நடந்து வரும் நிலையில் ஒப்பந்தம் விடப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக அரசு ஒப்பந்ததாரர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
வீட்டு வசதி வாரியத் தலைவர் உள்ளிட்டோருக்கு எஸ்.எம்.டிரேடர்ஸ் முகமது பாரூக் என்பவர் அளித்துள்ள புகாரில், 25 லட்சம் ரூபாய்க்கு அதிகமான மதிப்புள்ள ஒப்பந்தத்தை செய்தித்தாளில் விளம்பரம் வெளியிட்டு டெண்டர் விட வேண்டும் என்ற விதி இருப்பதால், இந்த ஒப்பந்தப் பணியை 10 லட்சம், 11 லட்சம் 4 லட்சம் என்று 3 பிரிவாக பிரித்து யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் ரகசியமாக டெண்டர் விடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
தங்களுக்கு தெரிந்த ஒப்பந்ததாரர்களை மட்டும் அழைத்து ஒப்பந்த கட்டணம் கட்டச்சொல்லி அதில் வேண்டப்பட்டவருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது என்றும், விண்ணப்ப கட்டணம் வழியாக அரசுக்கு கிடைத்திருக்க வேண்டிய 20 லட்சம் ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளதாகவும், 1 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்த பணியை குறைந்த தொகைக்கு ஒதுக்கீடு செய்ததன் மூலம் 80 லட்சம் ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாகவும் அந்த புகாரில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சென்னை மாநகராட்சியில் உள்ள அதிகாரி காந்தி என்பவர் மீது இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், முறைகேடு ஏதும் நடைபெறவில்லை என்றும் பணிகள் விரைவாக நடக்க வேண்டும் என்பதற்காக 3 ஆக பிரித்து வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த புகார் குறித்து முறையான விசாரணை நடத்தி, தவறிழைத்து இருப்பின் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு..!
Comments