36 லட்சம் சுருட்டல்.. முகநூல் வர்த்தகம் வருத்தமடைய செய்யும்..! 420 நைஜீரியன் கைது
சென்னையில் முகநூல் மூலம் அறிமுகமான பெண்ணிடம் வர்த்தக தொடர்பில் விழுந்த தொழில் அதிபரை ஏமாற்றி, 36 லட்சம் ரூபாயை சுருட்டிய நைஜீரிய இளைஞனை சென்னை காவல்துறையினர் மும்பையில் கைது செய்தனர்
சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்தவர் தொழில் அதிபர் ஜோசப். ராயல் டிரேடிங் என்ற பெயரில் தொழில் வாய்ப்புகள் குறித்து முகநூலில் பகிர்ந்து வந்த நிலையில், அவரது முகநூல் பதிவுகளைப் பார்த்து முகநூல் மெசஞ்சரில் லண்டனைச் சேர்ந்த எலிசபெத் என்ற பெண் அறிமுகமாகியுள்ளார். முதலில் தொழில் வாய்ப்புகள் குறித்து விசாரித்ததன் மூலம் ஜோசப்பின் நிதி நிலவரங்களை கேட்டறிந்துள்ளார்
ரத்தப் புற்றுநோயைக் குணப்படுத்தும் போலிக் ஆயில் மும்பையில் கிடைப்பதாகவும், வாரத்திற்கு 36 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அளவிற்கு போலிக் ஆயிலை (folic oil) வாங்கி அனுப்பினால், 42 லட்சம் ரூபாய் பணத்தை அனுப்பி வைப்பதாகவும் ஆசைவார்த்தை கூறியுள்ளார்.
36 லட்சம் ரூபாய்க்கு 6 லட்சம் ரூபாய் லாபமா? என்று அசந்து போன ஜோசப், லண்டன் பெண் சொன்னபடி மும்பையைச் சேர்ந்த சுனிதா என்ற பெண்ணை முகநூல் மூலம் தொடர்பு கொண்டு ஃபோலிக் ஆயிலை அனுப்பி வைக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
சுனிதா சொன்ன வங்கி கணக்கிற்கு 36 லட்சம் ரூபாய் செலுத்திய சில நொடிகளில் சுனிதா மற்றும் எலிசபெத் ஆகியோரின் செல்போன்கள் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டது தெரிய வந்தது. அவர்களை தொடர்பு கொள்ள முயன்றபோது தன்னிடம் முகநூலில் பேசியது போலியான நபர் என்பதைக் கண்டறிந்து அதிர்ந்து போனார்.
இது குறித்து சென்னை சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் புகார் அளித்தார். காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் வங்கி கணக்கு விவரங்களை வைத்து மும்பை விரைந்தனர். விசாரணையில் ஜோசப்பிடம் மும்பையில் இருந்து சுனிதா என்ற பெயரில் சாட்டிங் செய்தது நைஜீரியாவை சேர்ந்த இளைஞர் கிரிஸ்டோஃபர் வில்மர் என்பதும், அவன் 15க்கும் மேற்பட்ட சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதும், சென்னையில் மட்டும் 4 பேரிடம் இருந்து லட்சக்கணக்கில் பணத்தை சுருட்டியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
கிறிஸ்டோபர் வில்மரை கைது செய்த போலீசார், விமான கட்டுப்பாட்டுத் துறையின் சிறப்பு அனுமதி பெற்று அவனை சென்னைக்கு அழைத்து வந்தனர். பயனாளர்கள் முகநூலில் தங்கள் சுயவிவரங்களை தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என்று சுட்டிக்காட்டும் காவல்துறையினர், நேரடியாக ஆன்லைன் மூலம் அவர்களே வாங்காமல், நம்மூலமாக ஏன் பொருட்களை வாங்க வேண்டும் என சிந்தித்தால் மோசடியை தவிர்க்கலாம் என்கின்றனர்.
அதை விடுத்து முன்பின் அறிமுகம் இல்லாத நபர்களுடன் முகநூலில் வர்த்தகம் செய்வதாகக் கூறி லட்சங்களை அள்ளிக்கொடுத்தால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த சம்பவமே சான்று.
Comments