மதுரையில் எலியன்ஸ் சாமியார்..! 100 எலிகளுடன் வசிக்கிறார்...

0 33516
மதுரையில் எலியன்ஸ் சாமியார்..! 100 எலிகளுடன் வசிக்கிறார்...

மதுரையில், குளிக்காமல்  நீண்ட முடியுடன் குடிசைக்குள் நீண்டகாலமாக எலிகளுடன் முடங்கிக் கிடக்கும் முதியவர் ஒருவரை, மகான் என்றும் சாமியார் என்றும் மக்கள் வழிபட்டு வருகின்றனர். ஈக்கள் மொய்க்கும் சாமியாரால் ஏதாவது அதிசயம் நிகழாதா? எனக் காத்திருக்கும் மக்களின் ஏக்கம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு...

அழுக்கு சட்டை நீண்ட முடியுடன் காதுகளில் ஈக்கள் கூட்டமாக மொய்க்க ... நிமிர்ந்து கூட நிற்க முடியாத சிறிய சாலையோர குடிசையில் நூற்றுக்கணக்கான எலிகளுடன் வசிக்கும் இவர்தான் எலியன்ஸ் சாமியார் ஆண்ட்ரூஸ்..!

மதுரை எல்லீஸ்நகர் பகுதியைச் சேர்ந்த ஆண்ட்ரூஸ், அதே பகுதியில் உள்ள டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஹெலன்மேரி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ள நிலையில், 30 ஆண்டுகளுக்கு முன்பு இவர் ஒருநாள் திடீரென வேலை பார்த்த நிறுவனத்திற்கு அருகில் சாலையோரம் யாரிடமும் பேசாமல் அமர்ந்துள்ளார். குடும்பத்தினர் வீட்டிற்கு அழைத்தும், செல்லாமல் மெளன நிலையிலேயே அங்கேயே இருந்து விட்டதாகக் கூறப்படுகிறது.

கடந்த 30 வருடங்களாக அக்கம் பக்கத்தினர் கொடுக்கும் பிஸ்கட், தேநீர் மற்றும் உணவு உள்ளிட்டவைகளை சாப்பிட்டு வாழ்ந்து வரும் இவரை மகானாகவும் சாமியாராகவும் இப்பகுதி மக்கள் பார்த்து வருகின்றனர். ஆரம்பத்தில் சாலையில் அமர்ந்து ஆசி வழங்கி வந்த சாமியாருக்கு பக்தர்கள் குடிசையும் அமைத்து கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இவரை அணுகியவர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கியதால் பிரச்சனைகள் தீர்ந்ததாக தகவலை பரப்பி, சும்மா இருந்த சாமியாரை, சூப்பர் பவர் சாமியாராக மாற்றியுள்ளனர்.

இதனை உண்மை என நம்பி தினமும் கூட்டம் கூட்டமாக காத்திருந்து ஆண்ட்ரூஸ் சாமியாரை மண்டியிட்டு வணங்கி நெற்றியில் திருநீறு பெற்றுச் செல்கின்றனர்.

பக்தர்கள் இவருக்கு தேநீர், பிஸ்கட், ரொட்டி, குளிர்பானங்கள், மூன்று வேளையும் உணவு மற்றும் பலகார வகைகளைக் கொடுத்து வருகின்றனர். புதிதாக கம்பெனி ஆரம்பித்தால் அந்த பொருளை முதன்முதலாக இந்த சாமியார் முன்பு வைத்து வணங்கிச் செல்வதாகவும் கூறப்படுகிறது.

இவற்றை எல்லாம் சாமியார் ஆண்ட்ரூஸ் சாப்பிடுகிறாரோ இல்லையோ அவருடைய குடிசையில் வசிக்கின்ற நூற்றுக்கணக்கான எலிகள் தின்று கொழுத்து வருகின்றன.

அடங்காமல் பேசினால் மட்டும் அல்ல, எதுவுமே பேசாமல் இருந்தாலும் பிரபலமாகலாம் என்பதற்கு இந்த ஆண்ட்ரூஸ் சாமியாரே சாட்சி..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments