சிஸ்டர் அபயா கொலை வழக்கு- 28 ஆண்டுகளுக்குப் பிறகு நீதி!
கேரளாவை உலுக்கிய சிஸ்டர் அபயா கொலை வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட பாதிரியார் தாமஸ் கோட்டூருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், சிஸ்டர் செபிக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
28 ஆண்டுகளாக நடந்து வந்த சிஸ்டர் அபயா கொலை வழக்கில் திருவனந்தபுரம் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நேற்று பாதிரியார் தாமஸ் கோட்டூரும், கன்னியாஸ்த்ரி செபியும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தது. அதன் தொடர்ச்சியாக இன்று அவர்களுக்கான தண்டனைகளை நீதிபதி அறிவித்தார். அதன்படி இரண்டு குற்றவாளிகளில் ஒருவரான பாதர் தாமஸ் கோட்டூருக்கு இரட்டை ஆயுளும், சிஸ்டர் செபிக்கு ஆயுள் தண்டனயைம் விதிக்கப்பட்டுள்ளது. இருவரும் தலா 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
தீர்ப்பு வாசிக்கப்படுவதற்கு முன்னதாக நீதிமன்றத்தில் வாதம் நடந்தது. அப்போது இந்த இருவரும் செய்தது கொலைக்குற்றம் என்பதால் மரணதண்டனை வழங்குமாறு அரசு தரப்பில் வாதிடப்பட்டது.ஆனால் இது திட்டமிடப்பட்ட ஒரு கொலை அல்ல என்பதால் ஆயுள் தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி தெரிவித்தார்.
கடந்த 1992 ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் தேதி கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள புனித பயஸ் கான்வென்ட் கிணற்றில் 21 வயதான சிஸ்டர் அபயாவின் உடல் மிதந்தது. அது தொடர்பான வழக்கை முதலில் விசாரித்த குற்றப்புலனாய்வு போலீசார், அபயா தற்கொலை செய்து கொண்டதாக கூறி விசாரணையை முடித்தனர்.
அதற்கு பொதுமக்கள் மத்தியில் எழுந்த எதிர்ப்பை அடுத்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. முதலில் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகளும் தற்கொலை என்ற முடிவுக்கே வந்தனர். அதன்பின்னர் வழக்கை கையில் எடுத்த சிபிஐயின் வேறு ஒரு விசாரணை குழு, அபயா கொலை செய்யப்பட்டார் என்ற முடிவுக்கு வந்தது. கொலை தொடர்பாக பாதர் தாமஸ் கோட்டூர், பாதர் ஜோஸ் பூத்துருகையில், சிஸ்டர் செபி ஆகியோர் மீது 2008 ல் வழக்கு பதிவாகி கைது செய்யப்பட்டனர். பின்னர் ஆதாரம் இல்லை என கூறி பாதர் ஜோசை வழக்கில் இருந்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது.
பாதர் தாமஸ் கோட்டூர், சிஸ்டர் செபி ஆகியோரும் தங்களை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என தாக்கலான மனுக்களை கேரள உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் நிராகரித்து விட்ட நிலையில், சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பை வழங்கி தண்டனையை அறிவித்துள்ளது.
பாதர் தாமஸ் கோட்டரூக்கும் சிஸ்டர் செபிக்கும் இடையே இருந்த முறையற்ற உறவை பார்த்து விட்டதால் இந்த இருவரும் அபயாவை கோடாரியால் தாக்கி கிணற்றில் தள்ளினர். அதில் பம்ப் செட்டில் தலை மோதிய அவர் நீரில் விழுந்து இறந்தார். இந்த சம்பவத்தை அங்கு திருட வந்த ஒரு நபர் நேரில் கண்டு அளித்த சாட்சி இந்த வழக்கில் முக்கிய திருப்புமுனையானது.
Comments