’இது என் இரண்டாவது ஜென்மம்’ - 8 மாத கொரோனா சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பிய அமெரிக்க நர்ஸ்!

0 7881

மெரிக்கா, கலிபோர்னியாவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த போது நோய் தாக்குதல் ஏற்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார் மூத்த செவிலியர் ஒருவர். மரணத்தின் விளிம்பு வரை சென்றுவிட்டு, எட்டு மாத சிகிச்சைக்குப் பிறகு, பரிபூரணமாகக் குணமடைந்து தற்போது வீடுதிரும்பியுள்ளார். இது கொரோனா நோயாளிகள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

image

உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் அமெரிக்காவில் தான் கொரோனா தாக்கம் அதிகமாக ஏற்பட்டுள்ளது. அங்கு ஒவ்வொரு நாளும் பல்லாயிரக் கணக்கானோருக்கு கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதுவரை அமெரிக்காவில் கொரோனாவால் 1.81 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3.20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

இந்த நிலையில், அமெரிக்க மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாகக் கடந்த எட்டு மாதங்களாக கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த மூத்த செவிலியர் ஒருவர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளார்.

அமெரிக்காவின் கலிபோர்னியா, லாங்பீச் பகுதியில் உள்ள செயிண்ட் மேரி மருத்துவ மையத்தில் செவிலியராகப் பணிபுரிந்துவந்தார், 66 வயதான மெர்லின் பம்புவான் (( MERLIN PAMBUAN )). மருத்துவமனை கொரோனா முகாமில், நோயாளிகளைப் பராமரித்து வந்த மெர்லின் பம்புவானுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டது. கொரோனா நோய் தாக்கத்துக்கு உள்ளான மெர்லினுக்கு முதலில் காய்ச்சல் தான் ஏற்பட்டது. ஒரு வாரத்தில் அவரது நிலைமை மோசமானதையடுத்து பிறகு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட மெர்லின் சுயநினைவை இழந்தார். வெண்டிலேட்டர் மூலம் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது.

பல சூழ்நிலைகளில் மெர்லின் மரணத்துக்கு மிக அருகில் சென்றுவந்தார். மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் அவரது உயிரை இயந்திரங்களின் உதவியுடன் பிடித்து வைத்திருந்தனர். ஒரு கட்டத்தில் அவரது நிலைமை மிக மோசமாக, குடும்பத்தினரின் ஒப்புதலுடன் உயிர்காக்கும் கருவிகளை அகற்றி இறக்கவிட்டுவிடலாமா என்று கூட மருத்துவர்கள் நினைத்தனர். அந்த அளவுக்கு மிக மோசமாக அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தது.

image

ஆனாலும், தொடர் சிகிச்சை காரணமாக அக்டோபர் மாதத்துக்குப் பிறகு மெர்லினின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படத் தொடங்கியது. மருத்துவ உபகரணங்களுடன் போராடியபடி தீவிர சிகிச்சை மையத்திலேயே தனது 66 வது பிறந்த நாளைக் கொண்டாடினார். இதையடுத்து, இந்த வாரம் திங்கள் கிழமையன்று எட்டு மாத சிகிச்சையை முடித்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினார். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் ஆகியோர் மருத்துவமனை வாயிலில் நின்று கைதட்டி அனுப்பி வைத்தனர்.

வீட்டுக்குப் புறப்படுவதற்கு முன்பு, “இது எனது இரண்டாவது வாழ்க்கை. எனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார் மெர்லின். பிறகு, கொரோனாவால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சைபெற்று வரும் நோயாளிகளுக்கு, “நம்பிக்கையை மட்டும் இழக்காதீர்கள். நோய்க்கு எதிராகச் சண்டையிடுவதை மட்டும் நிறுத்தாதீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.

நீண்ட கால கொரோனா சிகிச்சைக்குப் பிறகு மெர்லின் பம்புவான் வீடு திரும்பியுள்ளது அமெரிக்காவில் கொரோனாவை எதிர்த்துப் போராடிவரும் மக்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments