லாரியில் இருந்து பறந்த கயிறு, நடந்து சென்றவரின் கழுத்தில் சிக்கி பலி.. நீண்ட தூரம் இழுத்துச் சென்ற கொடூரம்..!
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே ஓடிக்கொண்டிருந்த சரக்கு லாரியில் இருந்து பறந்து வந்த கயிறு சாலையில் சென்றவரின் கழுத்தை இறுக்கி பல கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் சென்றதில் அவர் முகம் சிதைந்து பலியான சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்கோவில் செல்லும் சாலையில் சரக்கு லாரி ஒன்று அதிவேகமாக சென்றுகொண்டிருந்தது.புது பூலாமேடு அருகே சென்று கொண்டிருந்தபோது, கேப் ரூஃப் (Cab roof) எனப்படும் லாரியின் மேற்புறத்தில் இருந்து கயிறு ஒன்று சாலையில் சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு நீண்டு செல்வதையும் அந்த கயிற்றின் முனையில் ஒருவர் சிக்கி இழுத்து வரப்படுவதையும் பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் பார்த்துள்ளார்.
லாரியை நெருங்கிச் சென்று ஓட்டுநரிடம் விஷயத்தைக் கூறவே, லாரியை நிறுத்திவிட்டு ஓட்டுநர் இறங்கி தப்பி ஓடிவிட்டார். கயிற்றின் முனையில் சிக்கி இழுத்துவரப்பட்ட அதே பகுதியைச் சேர்ந்த அன்புச் செல்வன் என்பவர் முகம் சிதைந்து உயிரிழந்து கிடந்தார்.
சரக்குகளை கட்டுவதற்காக லாரியில் வைக்கப்பட்டிருக்கும் அந்தக் கயிற்றை சரிவர சுருட்டி வைக்காமல், அலட்சியமாக வைத்திருந்திருக்கலாம் என்றும் லாரி சென்ற வேகத்தில் கயிறு காற்றில் பறந்து சாலையில் நடந்து சென்ற அன்புச் செல்வனின் உடலை இறுக்கி இழுத்து வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அன்புச் செல்வனின் உடலை மீட்ட போலீசார், தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
லாரியின் பதிவெண் விவரங்களைக் கொண்டு விசாரணை செய்து தப்பியோடிய லாரி ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் வல்லம்படுகையைச் சேர்ந்த பிரபு என்பதும் காட்டுமன்னார்கோவிலில் சமையல் எண்ணெய் கேன்களை இறக்கிவிட்டு வரும்போது விபத்து நேர்ந்ததும் தெரியவந்துள்ளது.
Comments