போலீஸ் தந்தையின் சமாதி அருகே ரவுடி மகன் கொலை: சந்தேக வளையத்தில் 2ஆவது மனைவி..!
செங்கல்பட்டு மாவட்டம் மேலையூரில், தந்தையின் சமாதிக்கு காரில் சென்றபோது வழிமறித்து, கொடூரமாக கொலை செய்யப்பட்டு, மயானத்தில் பாதி எரிந்த நிலையில் வீசப்பட்ட ரவுடியின் உடலை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர். கொலை செய்யப்பட்ட ரவுடிக்கு 3 மனைவிகள் உள்ள நிலையில், உடன் வாழ்ந்து வந்த இரண்டாவது மனைவி பணத்திற்கு ஆசைப்பட்டு அரங்கேற்றிய கொலையா என விசாரணை தீவிரமடைந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், மேலையூர் கிராமத்தை சேர்ந்தவர் சதிஷ்குமார். போலீஸ் அதிகாரியாக இருந்த சந்திரன் என்பவரின் மகனான சதீஷ்குமாருக்கு 3 மனைவிகள் உள்ளனர்.
முதல் மனைவி பிரிந்துவிட்டதாகவும், மூன்றாவது மனைவி முள்ளிபக்கம் கிராமத்தில் 4 வயது மகனுடன் வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. சதீஷ்குமார் 2வது மனைவி லட்சுமியுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்த லட்சுமி தனது முதல் கணவரை, சதீஷ்குமாருடன் சேர்ந்து கொலை செய்த வழக்கு கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.
இதுதவிர சதீஷ்குமார் மீது கட்டபஞ்சாயத்து, கொலை, கொள்ளை, வழிப்பறி, கொலை முயற்சி, ஆள் கடத்தல், பாலியல் வன்முறை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக சொல்லப்படுகிறது.
சதீஷ்குமார் திருந்தி வாழ கடந்த ஆண்டு காவல்துறையிடம் கருணை மனு வழங்கியுள்ளதாகவும், அமமுகவில் சேர்ந்து உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட திட்டமிட்டிருந்ததாகவும், அண்மையில் நிலம் ஒன்றை விற்று ஒரு கோடி ரூபாய் வரை வைத்திருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், நேற்று இரவு மேலையூர் கிராமப்பகுதியில் உள்ள தந்தையின் சமாதிக்கு சதீஷ்குமார் காரில் சென்றபோது மர்மகும்பல் ஒன்று வழிமறித்துள்ளது. சதீஷ்குமாரை தலை, கழுத்து, வயிறு, கால் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கத்தியால் குத்தி கொலை செய்து, உடலை சுமார் 500 மீட்டர் தொலைவில் இருந்த மயானத்திற்கு இழுத்துச் சென்று அவரது தந்தையின் சமாதிக்கு அருகே தீயிட்டு எரித்துள்ளனர்.
விபத்து நடந்ததுபோல் சித்தரிக்க காரை கவிழ்த்துவிட்டுச் சென்றுள்ளனர். சம்பவ இடத்தில் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்த போலீசார், பாதி எரிந்த நிலையில் ரவுடியின் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பணத்திற்காக ஆசைப்பட்டு 2ஆவது மனைவி லட்சுமியே கொலையை அரங்கேற்றினாரா, ஏற்கெனவே இருந்த முன்பகை காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Comments