காவலர் குடியிருப்புகளில் தொடர் சைக்கிள் திருட்டு.. திருடன், கூட்டாளி கைது..!
சென்னையில் தன்னை கைது செய்த போலீசை நூதன முறையில் பழிவாங்க காவலர் குடியிருப்புகளுக்குள் புகுந்து சைக்கிள்களை திருடி வந்த நபரையும், கூட்டாளியையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
எழும்பூர் காவலர் குடியிருப்பு உள்ளிட்ட காவலர் குடியிருப்புகளில் சிறுவர்களின் சைக்கிள்கள் மட்டும் குறிவைத்து திருட்டு போவதாக அடுத்தடுத்து புகார் எழுந்ததால், திருடனை பிடிக்க சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் இரவு நேரத்தில் ஒருவன் சைக்கிளை திருடிச் செல்லும் காட்சிகள் இருந்தன.
இதைத் தொடர்ந்து சைக்கிள் திருடனை பிடிக்க, சிசிடிவி காட்சி நேரத்தை கணக்கிட்டு எழும்பூர் காவலர் குடியிருப்பு பகுதியில் போலீசார் மறைந்திருந்து காத்திருந்தனர். அதையறியாத திருடன் வழக்கம்போல சைக்கிளை திருடிக் கொண்டு வெளியில் வந்தபோது அவனை மடக்கிபிடித்து விசாரித்தனர்.
இந்த விசாரணையில், அவன் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த காஜா மொய்தீன் என்பதும், சென்னை துறைமுகத்தில் கூலி தொழிலாளியாக பணியாற்றிய நிலையில் ஊரடங்கால் வேலையிழந்து நடைபாதையில் தங்கியதும், அப்போது குடிபோதையில் தகராறு செய்து அங்கிருந்தவரை தாக்கியதாக கைது செய்யப்பட்டு பின்னர் வெளியில் வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
தம்மை கைது செய்த போலீசை பழிவாங்க காவலர் குடியிருப்புகளுக்குள் புகுந்து சைக்கிள்களை திருடி, மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் கதிர் மூலம் 400 முதல் 500 ரூபாய்க்கு விற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்கள் பதுக்கி வைத்திருந்த 9 சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.
Comments